காற்றில் பறந்த கண்ணியம்

காற்றில் பறந்த கண்ணியம்

3 mins read
e77712a3-553b-4977-bd2e-ec65ca13920d
உதயநிதி ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறிப் படத்தை வாக்காளர்களிடம் காட்டுகிறார்கள். - படம்: விகடன்
Google News Preferred Icon

தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் எல்லாக் கட்சிகளும் இரவு பகலாகப் பிரசாரம் செய்துவரும் வேளையில் தலைவர்களின் பிரசாரம் எந்த அளவுக்கு நாகரிகமாக உள்ளது எனப் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான எதிரெதிர் வாதங்களில் கண்ணியம் குறைவாக இருப்பதாக நடுநிலையாளர்கள் சுட்டுகின்றனர்.

ஓரிடத்தில் உதயநிதி பிரசாரம் செய்தபோது, ஒரு படத்தைக் காட்டி, “இது யார் தெரிகிறதா, ஓர் ஆள் படுத்திருக்கிறார்... இந்த அனுபவம் எனக்கில்லை. முதலில் ஜெயலலிதா அம்மா காலில் விழுந்தார். அவர் இறந்தவுடன் சசிகலா அம்மா காலில் விழுந்தார். அவர் ஜெயிலுக்குப் போனதும் டிடிவி காலில் விழுந்தார். அப்புறம் ஓபிஎஸ் காலில் விழுந்தார். இப்போ நேரா டெல்லிக்குப் போய் மோடி காலில் விழுந்த ஒன்றாம் நம்பர் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி அவர்கள். டேபிளுக்கு அடியில் தவழ்ந்துதான் போவேன் என்று அடம்பிடிக்கக்கூடியவர் அவர்,” என்று பேசினார். முன்னாள் முதல்வரை, ஒரு கட்சியின் தலைவரை விமர்சிக்கிறோம் என்பதை அவர் சிந்திக்கவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.

எடப்பாடி பழனிசாமி தமது பிரசார உரையில், “ஏற்கெனவே பாலிடால் குடிச்சு தப்பிச்சுட்டீங்க... மீண்டும் பாலிடால் குடிச்சா உங்க பாடி தாங்காது தம்பி. பண்பில்லாத குடும்பத்தில் பிறந்தவர் தரக்குறைவாகப் பேசுகிறார். பாலிடால் குடித்ததெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது. அப்பவே மேலோகத்திற்குப் போகவேண்டியது. இங்கிருந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு இருக்கு. ஸ்டாலின் அறிவித்த 8,000 ரூபாய் கூப்பன் மூலம் வரும் கமிஷன் ஸ்டாலின் குடும்பத்துக்கே போய்ச் சேரும்,” இப்படி பதில் கூறியிருக்கிறார்.

பாலிடால் (Polidol) என்பது நச்சு நிறைந்த பூச்சி மருந்து. ஒரு நடிகைக்காக உதயநிதி இதைக் குடித்ததாக எப்பவோ எங்கோ வதந்தியாகப் பரவிய தகவலை முதல்வர் பதவியில் இருந்தவர் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்ததாக ஊடகம் ஒன்று எழுதியுள்ளது. இரு கட்சிகளும் நூற்றுக்கணக்கில் அள்ளி வீசியிருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி அதிகம் பேசாமல், தனிப்பட்ட, குடும்ப விவகாரங்களைப் பொதுவெளியில் இழுப்பதால் வாக்கு விழுந்துவிடுமா என்று அந்த ஊடகம் கேட்டுள்ளது.

ஒரு காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள்.

திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை எம்ஜிஆர் துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின், எம்ஜிஆர்-கருணாநிதி இடையிலான மோதல் உச்சத்திலிருந்தது. அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ஜேப்பியார் ஒரு மேடையில் கருணாநிதியைக் கடும் வார்த்தைகளால் திட்டிவிட்டு எம்ஜிஆரை வந்து சந்தித்தார். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது கருணாநிதியை மேடையில் தாம் வறுத்தெடுத்துவிட்டதாக எம்ஜிஆரிடம் அவர் பெருமிதமாகக் கூறினார். அடுத்த வினாடி ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொன்னார் எம்ஜிஆர்.

ஜேப்பியாரை காரிலிருந்து இறங்கச் சொல்லிவிட்டு, “கலைஞரை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...அவரைப் பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், ஒருகாலத்தில் எனக்குத் தலைவராக இருந்தவர் அவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படிப் பேசுவாய்,” என்று கோபத்துடன் புறப்பட்டார் எம்ஜிஆர் - என்ற தகவல் அந்தக் காலத்தில் வார ஏடுகளில் வலம் வந்தது.

அரசியலில் நாகரிகம், கண்ணியம் குறையாதபடி பார்த்துக்கொண்ட தலைவர்களின் கட்சிகளில் உள்ளவர்கள்தான் தற்போது ஏதோதோ பேசுவதாக வாக்காளர்கள் முணுமுணுக்கிறார்கள். தலைவர்கள் மாறினால் பேச்சின் தரமும் மாறிவிடுமா என்ன? -திருநா

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்