சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக, ஆறு பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இதுவே தாம் நடிக்கும் கடைசிப் படம் என அறிவித்திருந்தார் விஜய்.
தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த இந்தப் படம், முடங்கிப்போனது. இதையடுத்து சில தரப்பினர் தனது அரசியல் நடவடிக்கைகளை முடக்கப் பார்ப்பதாக விஜய் குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகாலை இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அடுத்த சில மணி நேரங்களில் முழுப் படமும் இணையத்தில் வெளியானதால், படத்தின் தயாரிப்புத் தரப்பினரும் தவெக தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இச்செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சென்னை காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) ஆறு பேரைக் கைது செய்தனர்.
அனைவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், பதிப்புரிமைச் சட்டம் தொடர்புடைய விதிகளின்கீழ், ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மேலும், ‘ஜனநாயகன்’ படத்தின் திருட்டுப் பிரதிகளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதும் பகிர்வதும் சட்டப்படி குற்றம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

