கடலூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கடலூர் மாவட்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) நடந்தது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டார்.
“கட்சித் தலைவர் விஜய்க்கு நெருக்கமான மாவட்டம் கடலூர். ‘தானே’ புயல், சுனாமி பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு அவர் உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காகச் சேவை செய்து வருகிறோம்,” என்றார் புஸ்சி ஆனந்த்.
“எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்குச் சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர். ஓய்வு பெற்று, படம் வெற்றிபெறாமல் அவர் அரசியலுக்கு வரவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளையும் தவெக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளதாக புஸ்சி ஆனந்த் கூறினார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கட்சித் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் பேசினார்.
“பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் திமுக இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் தான், உண்மையான விவரம் தெரிய வரும். சமூக நீதி கூட்டணி என்று சொல்லும் திமுக ஏன் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. அந்தக் கூட்டணியில் உள்ளவர்களும் இதைப்பற்றி இதுவரை கேட்கவில்லை,” என்று அவர் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் கூட்டத்தில் பேசினார்.

