விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது எங்கள் முதுகில் குத்தும் செயல்: திமுக

விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது எங்கள் முதுகில் குத்தும் செயல்: திமுக

2 mins read
ffe5b7e6-cfcf-4391-ae72-4f0563589e78
திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை. - படம்: எக்ஸ்
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும் முடிவு, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவின் முதுகில் குத்துவதைப் போன்றது என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சி ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. காங்கிரசும் ஆதரவு கொடுக்க முன்வந்திருப்பகாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை.

நேர்காணலின்போது பேசிய திரு சரவணன், “தவெகவுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவைக் காங்கிரஸ் எடுத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி எவ்விதத் தொலைநோக்குப் பார்வையும் இன்றி, குறுகிய நோக்குடன் இந்த முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இப்படியொரு முடிவை எடுத்ததற்காக அவர்கள் வருத்தப்பட நேரிடும்,” என்று சரவணன் கூறியுள்ளார்.

“2029 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றிவிட முடியும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால், காங்கிரஸ் இப்போது எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக, அவர்கள் ஒரு நிலையற்ற கூட்டணிக் கட்சியாக மாறிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியை நம்ப முடியாது என்ற ஒரு கருத்து நாடு முழுவதும் பரவியுள்ளது,” என்றார் சரவணன்.

“தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு நாள்தான் ஆகிறது. அதற்குள் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது, முதுகில் குத்தும் செயல். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்றும் எனவே இந்த முடிவை எடுப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த முடிவைக் காங்கிரஸ் கட்சி முழு மனத்துடன் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு (இண்டியா) கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்,” என்று திரு சரவணன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்