கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

2 mins read
b91f6da8-2c36-4a6b-8e5c-311e79993d99
கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த இடத்தை மூத்த காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். - படம்: இந்திய ஊடகம்

கோவை: கல்லூரி மாணவி ஒருவர் மூன்று ஆடவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்தச் சம்பவம் கோவை அனைத்துலக விமான நிலையத்திற்குப் பின்புறம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) இரவு 11 மணியளவில் நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.

பாதிக்கப்பட்ட 20 வயது மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு எம்பிஏ படித்து வருவதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர்-எஸ்ஐஎச்எஸ் காலனி ரோடு அருகே உள்ள காலி இடத்தில் இரவு நேரம் கார் ஒன்றினுள் அமர்ந்து தமது ஆண் நண்பருடன் அந்த மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது மூவர் அடங்கிய கும்பல் ஒன்று அங்கு வந்தது.

காரின் கண்ணாடியைக் கல்லால் உடைத்த கும்பல், ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு மாணவியை வெளியில் இழுத்துத் தூக்கிச் சென்றது. அருகிலுள்ள வேறு ஓர் இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்ற மூன்று ஆடவர்களும் அந்த மாணவியை அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர், அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

மயக்க நிலையில் இருந்த நண்பர், சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற பீளமேடு காவல்துறையினர் மாணவியைப் பல இடங்களிலும் தேடினர். அதன் பயனாக, ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் மாணவியைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரது நண்பர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

திங்கட்கிழமை (நவம்பர் 3) காலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற மூத்த காவல்துறை அதிகாரிகள் அங்கு பார்வையிட்ட பின்னர், தப்பி ஓடிய மூவரையும் பிடிக்க ஏழு தனிப்படைகளை அமைத்தனர்.

அந்த மூன்று ஆடவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக, பாஜக கண்டனம்

இந்நிலையில், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவும் திமுக ஆட்சி தவறிவிட்டது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

“பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ சட்டம் ஒழுங்கைக் காக்கவோ காவல்துறையினரைப் பயன்படுத்தாமல் திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால் தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.

“இப்படி ஒரு கையாலாகாத நிலையில், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்,” என அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்,” என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில், தமிழகப் பெண்கள் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்