கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

2 mins read
f923b997-e381-4040-a8d1-630f975bdd0f
ஜூன் 6ஆம் தேதி போராட்டத்தை நடத்த அனைவருக்கும் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு, ‘சிபிஎஸ்இ’ தேர்வு ஆகியவற்றில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

அவர் உடனடியாகப் பதவி விலகக் கோரி, அண்மையில் உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறது.

இந்த வார இறுதியில் டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறது என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்தார்.

ஜூன் 6ஆம் தேதி போராட்டத்தை நடத்த அனைவருக்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சிச் சின்னம் அல்லது பதாகைகள் ஏதுமின்றி யார் வேண்டுமானாலும் இப்போராட்டத்தில் இணையலாம் என்று கூறினார்.

அதிகாரத்தில் இருப்பவர்களோ எதிர்க்கட்சியினரோ, யாராக இருந்தாலும் சரி, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது சவுரவ் தாஸ் குறிப்பிட்டார்.

தேர்வுக் குளறுபடிகள் தொடர்பாக சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

இந்நிலையில், மத்திய பாஜக அரசு எடுத்த முடிவு, வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் இதனால் பிரச்சினை தீராது என்றும் சவுரவ் தாஸ் கூறினார்.

இந்திய அரசு இந்தப் பிரச்சினைக்குப் பொறுப்பேற்க வேண்டும், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்ட அவர், இன்று வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
கரப்பான்பூச்சிகட்சிபோராட்டம்