தலைமைச் செயலகத்தில் அதிர்வு; தலைதெறிக்க ஓடிய ஊழியர்கள்

2 mins read
56fbe4e7-7cdd-47ff-930a-18082ff1d638
தலைமைச் செயலகக் கட்டடத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்கள். - படம்: ஊடகம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிர்வு உணரப்பட்டதால் அரசு ஊழியர்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ளன.

நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து கட்டடத்தில் பணியில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், அது வெறும் டைல்ஸ்(tiles) வெடிப்பு என்பதை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதனைத்தொடர்ந்து பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

இதையடுத்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாமக்கல் கவிஞர் மாளிகை என்பது, 1974ல் கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஒரு மாளிகை. இங்குதான், தலைமைச் செயலகத்தின் முழு அலுவலகமும் இருக்கிறது.

“இதன் முதல் தளத்தில், வேளாண்மைத்துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் தளத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பணியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

“இந்தச்செய்தி கிடைத்தவுடன் இங்கு வந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கட்டடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும் உருகுலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது.

“தரைத்தளத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பாக டைல்ஸ் பதிக்கப்பட்டன. அதில்தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலைப் பார்த்துதான், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

“சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர், நிர்வாகப் பொறியாளர், மேற் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சோதனை செய்து கட்டடம் உறுதித்தன்மையோடு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

“அந்தக் காலக்கட்டத்தில் உள்ள டைல்ஸ்கள் தற்பொழுது கிடைப்பது அரிது. அதனால் புது டைல்ஸ்கள் பதிக்க உத்தரவிட்டுள்ளேன். விரைவில் சரிப்படுத்தப்படும். கட்டடம் உறுதியுடன்தான் இருக்கிறது. அதனால் பணியாளர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்