சரக்குகளைக் கையாள்வதில் சென்னை விமான நிலையம் சாதனை

சரக்குகளைக் கையாள்வதில் சென்னை விமான நிலையம் சாதனை

2 mins read
11408add-060c-4251-9ec8-0456078f84ac
சென்னை விமான நிலையத்தில் ஐந்தாவது செயற்கைக்கோள் முனையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. - கோப்புப் படம்: பிரேக் பல்க்
Google News Preferred Icon

சென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டைவிட 2025-26ஆம் ஆண்டு சரக்குகளைக் கையாளும்விதம் 11.7 விழுக்காடு அதிகமாகியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மட்டும் 16,000 டன் சரக்குகளை இறக்குமதி செய்து சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவு சாதனை படைத்துள்ளது.

வரலாற்றில் இவ்வளவு சரக்குகளைக் கையாண்டது இதுவே முதல்முறை என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் ஐந்தாவது செயற்கைக்கோள் முனையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்தப் புதிய முனையத்தில் பயணிகள், சரக்குப் போக்குவரத்து என இரண்டு சேவைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்தாவது செயற்கைக்கோள் முனையத்திற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அம்முனையத்தில் சரக்குகளைக் கையாளும் பணி துரிதமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிநவீன வசதிகளைக் கொண்டதாக அம்முனையம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குத் தோல் பொருள்கள், காலணிகளின் மேல் பாகங்கள், ஜவுளி ரகங்கள், ஆயத்த ஆடைகள், இயந்திர உதிரி பாகங்கள், தங்க ஆபரணங்கள், காய்கறிகள், பழங்கள், பூ வகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து சுத்தமான தங்கக் கட்டிகள், இயந்திர சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருள்கள், கார்கள் போன்றவை அதிகளவில் இறக்குமதியாகின்றன.

சரக்கு போக்குவரத்தை கால தாமதம் இல்லாமல், துரிதமாக நடத்த ஏதுவாக இடிஐ எனப்படும் மின்னணு தரவுப் பரிமாற்றம் என்ற முறை கையாளப்படுகிறது.

அந்த முறையில் சிங்கப்பூர், ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து சரக்குகள் விமானங்களில் ஏற்றப்பட்டு, அங்கு சுங்கச் சோதனை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து, சீல் வைக்கப்படுகிறது.

அச்சரக்குகள் இடையில் வேறு எந்த நாட்டிற்கும் செல்லாமல் நேரடியாக சென்னையில் வந்து இறங்கிவிடும்.

இதுபோன்ற ஏற்பாடுகளால் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாளப்படும் விகிதம் அதிகரித்துள்ளது.

ஐந்தாவது செயற்கைக்கோள் முனையம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்போது சென்னை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
சென்னை விமான நிலையம்சரக்குவரிபோக்குவரத்துபயணிகள்