ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்கு

பண மதிப்பிழப்பு காலத்தில் ரொக்கம் கொடுத்து ஆலை வாங்கியதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்கு

2 mins read
73439ec7-ae75-4b7d-98bf-a843bd9789c1
பணமதிப்பிழப்பு சமயத்தில் சசிகலா, ரூ.450 கோடிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்மாதேவி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையை ரொக்கத் தொகை கொடுத்து வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: இந்தியாவில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, 450 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்து அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பது மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (சிபிஐ) அறிக்கையில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அந்தச் சர்க்கரை ஆலை, ரூ.120 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

மத்திய அரசு, 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதன்படி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.

அதற்கடுத்த சில வாரங்களில், சசிகலா, ரூ.450 கோடிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்மாதேவி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையை ரொக்கத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017ல் சசிகலா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது, சர்க்கரை ஆலை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலையை நிர்வகித்து வந்த ஷிதேஷ் ஷிவ்கன் படேல் அளித்த வாக்குமூலத்தில், சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு ரூ.450 கோடி பழைய நோட்டுகளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்மாதேவி சுகர்ஸ் நிறுவனம், அதன் இயக்குனர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல், தினேஷ் ஷிவ்கன் பட்டேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டியராஜ், வெங்கட பெருமாள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்றுக் கொண்டது, சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது, பணத்தை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடனாக பணத்தை வழங்கியது, பணமதிப்பிழப்பு அமலில் இருக்கும்போது, சந்தேகத்துக்குரிய வழியில் வந்த பணத்தை ரொக்கமாக வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த சர்க்கரை ஆலையை பினாமி சொத்து என அறிவித்திருக்கும் வருமான வரித்துறை, உண்மையான உரிமையாளர் சசிகலா என அறிவித்துள்ளது.

இந்த வழக்கு, அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்