அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் தடை

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் தடை

2 mins read
29ac4330-03aa-4d7e-b791-d5f9e2577866
எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்
Google News Preferred Icon

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக்கூடாது என சூரியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, நான்கு வாரங்களில் மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக்கூடாது என முன்னாள் எம்பி ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது இந்த விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளவர்கள் அதிமுக உறுப்பினர்கள் கிடையாது. உறுப்பினர் அல்லாதவர்கள் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கைத் தொடர எந்தவித முகாந்திரமும் இல்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கட்சி உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக மனுதாரர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை கிடையாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வியாழக்கிழமை (ஜனவரி 9) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என்று கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்