விஜய்-புஸ்ஸி ஆனந்த் ஆனந்த கண்ணீர்

1 mins read
6aaf8d74-77de-429d-ae3f-e17a0c7d74d4
கட்சிக் கொடியைக் கொடி கம்பத்தில் ஏற்றிவிட்டு, விழா நடந்த இடத்தில் முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜய்யும் புஸ்ஸி ஆனந்தும், தவெக கொடிப் பாடல் அங்கத்தின்போது கண்கலங்கினர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி அறிமுக விழாவில் விஜய்யும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கண்கலங்குவதைக் காட்டும் காட்சி ஊடகங்களில் வலம் வருகிறது.

சென்னை பனையூரில் தவெக கொடியை அக்கட்சித் தலைவர் விஜய் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கட்சிக் கொடியைக் கொடி கம்பத்தில் ஏற்றிவிட்டு, விழா நடந்த இடத்தில் முன்வரிசையில் விஜய்யும் அவருக்கு இடது பக்கம் புஸ்ஸி ஆனந்தும் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது தவெக கொடிப் பாடல் ஒளிபரப்பாக, அதைக் கண்டு விஜய்யும் புஸ்ஸி ஆனந்தும் கண்கலங்கினர். அதைக் காட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

பாடல் அனைவருக்கும் புரியும்படியான எளிய தமிழ்ச் சொற்களால் பாடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும் தமன் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்திய நேரப்படி காலை 9.15 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜய், புஸ்ஸி ஆனந்தின் வரவேற்புரையைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கட்சியின் உறுதிமொழியை ஏற்றார். பின்னர் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார்.

கட்சிக் கொள்கை குறித்துப் பேசிய விஜய், கட்சியின் கொள்கையும் கொடிக்குப் பின்புள்ள காரணமும் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.

விழா தொடங்குவதற்குமுன் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா கால்களில் விழுந்து புஸ்ஸி ஆனந்த் வாழ்த்து பெற்றார்.

குறிப்புச் சொற்கள்