சென்னை: சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 11) மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது.
மிரட்டலைத் தொடர்ந்து, காவல்துறையும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் போயஸ் கார்டன் பகுதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்குரிய பொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் வந்த முகவரியைக் கொண்டு மிரட்டல் விடுத்தவரைத் தேடி வருவதாகக் காவல்துறை கூறியது.
அண்மைக் காலமாக இந்தியாவில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், முக்கியமானவர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது ஒரு வழக்கமான நிகழ்வாகத் தொடர்கிறது. ஆயினும், பாதுகாப்பு கருதி காவல்துறைச் சோதனைகள் நடத்தப்படுவதும், முடிவில் அவை பெரும்பாலும் வதந்தியாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

