‘சின்ன’ கதையில் பெரிய திருப்பங்கள்

‘சின்ன’ கதையில் பெரிய திருப்பங்கள்

3 mins read
397867b8-75fe-4101-a373-88741f728135
கட்சிகள் இதற்கு முன்னர் பயன்படுத்திய பெரும்பாலான சின்னங்கள் இந்தத் தேர்தலில் இல்லை. - படம்: செயற்கை நுண்ணறிவு

சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப் பெட்டியின் வண்ணத்தைப் பார்த்து வாக்களிக்கும் முறை இருந்தது. 1957ல்தான் சின்னங்கள் அறிமுகம் கண்டன. 1957 தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கிய திமுகவுக்கு ஒரே சின்னம் தரப்படவில்லை. அண்ணாதுரை சேவல் சின்னத்திலும் கருணாநிதி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

[ο] 1958ல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக திமுக உருவெடுத்த பின்னர் உதயசூரியன் சின்னத்தை அண்ணாதுரை கேட்டு வாங்கினார். திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படுவதற்கு முன்பு வன்னியர்குல சத்திரியர் கட்சியை நடத்தி வந்த கோவிந்தசாமி படையாச்சியிடம்தான் அந்தச் சின்னம் இருந்தது என்பது வரலாறு. ஏறத்தாழ 68 ஆண்டுகளாக ஒரே கட்சியிடம் உள்ளது உதயசூரியன்.

[ο] 1973 திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில்தான் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் அறிமுகம் கண்டது. 16 ஆண்டுகள்வரை நீடித்த இரட்டை இலைக்கு 1989ல் சோதனை வந்தது. அந்தச் சின்னம் முடக்கப்பட்டு அதிமுகவின் இரு அணிகளுக்கு சேவல், இரட்டைப் புறா என இரு சின்னங்கள் தரப்பட்டன. அணிகள் இணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைத்தது.

[ο] திமுகவிலிருந்து பிரிந்து வைகோ உருவாக்கிய மதிமுகவுக்கு 1996ல் குடைச் சின்னம் கிடைத்தது. தேர்தல் தோல்வியால் கட்சி அங்கீகாரத்தை இழந்ததுடன் குடைச் சின்னமும் பறிபோனது. 1998ல் பம்பரச் சின்னம் பெற்ற மதிமுக 2010ல் அதனையும் இழந்தது. 2021 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, 2026 தேர்தலிலும் அதனையே தொடர்கிறது.

[ο] 1996ல் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருந்தது சைக்கிள் சின்னம். அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் சின்னத்தைப் பறிகொடுத்து தென்னை மரம், ஆட்டோ ரிக்‌ஷா சின்னங்களில் களம் கண்ட அக்கட்சி, 2021 தேர்தலில் இரட்டை இலை, 2026 தேர்தலில் தாமரை எனச் சின்னத்தை மாற்றிக்கொண்டது.

[ο] டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தொடக்கத்தில் தொப்பிச் சின்னமும் பின்னர் குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

[ο] 1990ல் பாமக உருவானபோது அக்கட்சிக்கு யானைச் சின்னம் கிடைத்தது. பின்னர், மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்து யானையைப் பறிகொடுத்தது. 1997ல் பகுஜன் சமாஜ் கட்சி தேசியக் கட்சியாக மாறியதால் யானைச் சின்னத்தை அது தன்வசமாக்கியது. அதனால், பாமக 1998ல் மாம்பழச் சின்னத்தைப் பெற்று தேர்தல் களம் கண்டது. 2026 தேர்தலில் அதே சின்னத்துடன் பாமக போட்டியிட்டாலும் டாக்டர் ராமதாசும் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்.

[ο] 2006 சட்டமன்றத் தோ்தலில் அறிமுகம் கண்ட தேமுதிகவுக்கு முரசுச் சின்னம் ஒதுக்கப்பட்டது. 2011ல் 29 எம்எல்ஏக்களை வெற்றிபெற வைத்த ராசியான சின்னம் என்பதால், பல சோதனைகளுக்கு நடுவிலும் அச்சின்னத்தைப் பறிகொடுக்காமல் கவனத்துடன் பாதுகாத்து வருகிறது தேமுதிக.

[ο] 1990ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கிய தொல்.திருமாவளவன் மூப்பனாருடன் இணைந்து 1999ல் முதன்முறை தேர்தலைச் சந்தித்தபோது தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார். அதன் பின்னர், உதயசூரியன், வில் அம்பு, ஆலயமணி, இரட்டை மெழுகுவத்தி, மோதிரம், பானை என ஏழு சின்னங்களைக் கண்ட கட்சியாக விசிக உள்ளது.

[ο] சீமானின் நாம் தமிழர் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தலில் அறிமுகம் கண்டபோது இரட்டை மெழுகுவத்தி சின்னத்திலும் 2019 மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது. 2021 தேர்தலிலும் 2026 தேர்தலிலும் அந்தச் சின்னம் தொடர்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் நாதக போட்டியிட்டது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் அல்லது 6 விழுக்காட்டு வாக்குகளைப் பெறவேண்டும். அங்கீகாரத்தை இழந்து சின்னத்தையும் இழந்தாலும் அடுத்து வரும் தேர்தலில் அந்தச் சின்னத்தை வேறு யாரும் கேட்காதபட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் மீண்டும் பெற முடியும்.

ஆக, அதிமுக, திமுக தவிர இதர அரசியல் கட்சிகள் பல தமிழ்நாட்டில் இருந்தபோதிலும் அவற்றைப் பத்து விழுக்காட்டு வாக்குகளுக்கு உள்ளேயே மக்கள் வைத்திருப்பதால்தான் அந்தக் கட்சிகளின் சின்னங்களில் அவ்வப்போது திருப்பம் நிகழ்வதாகக் கருதலாம். -திருநா

குறிப்புச் சொற்கள்