தமிழ்த் திரையுலகின் மூத்த, பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவருக்கு வயது 86.
உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 4) இயற்கை எய்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
திரு சரவணனின் தந்தையான ஏவி மெய்யப்ப செட்டியார் 1945ஆம் ஆண்டில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். அவர் தமிழ்த் திரையுலகத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்குப் பிறகு, ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏவிஎம் சரவணன் பொறுப்பு வகித்தார். புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களுடன் இவருக்குத் தொடர்பு உண்டு.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இவர் தயாரித்துள்ளார்.
நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம். மின்சாரக் கனவு, அயன், சிவாஜி த பாஸ் போன்ற படங்கள் அவற்றில் அடங்கும்.
திரு சரவணன் தயாரித்த திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் லாபத்தை ஈட்டியது மட்டுமல்லாது கலாசார ரீதியில் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
தயாரிப்பாளர் என்கிற முறையில் தமிழ்த் திரையுலகிற்குத் திரு சரவணன் பேரளவில் பங்காற்றினார். இதற்காகவே அவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டன. 1986ஆம் ஆண்டில் மதராஸ் ஷெரிஃபாகவும் அவர் சேவையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
திரையுலகையும் கடந்து சமுதாயத்துக்கு அவர் சேவையாற்றி நற்பெயருடன் வாழ்ந்ததை இது பிரதிபலிக்கிறது.
திரு சரவணனுக்கு எம்.எஸ் குகன் என்ற மகன் உள்ளார். அவரும் திரைப்படத் தயாரிப்பாளரே.
அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று அவர் கூறினார்.
திரு ஏவிஎம் சரவணனின் மறைவு தமிழ்த் திரையுலகை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

