வேளச்சேரி: செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது கணவர் இறந்து போனதைத் தொடர்ந்து, பள்ளிக்கரணையில் பல்வேறு வீடுகளிலும் வேலை செய்து, தனது மகள் சத்யஜோதியை ஒரு கல்லூரியில் படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், பள்ளிக்கரணையில் குத்தகைக்கு வீடு பார்த்து தருவதாக தரகர் ஒருவர் கூறியதை நம்பி, தான் சேமித்து வைத்திருந்த ரூ.2.50 லட்சத்தை அந்த ஆடவரிடம் ராஜேஸ்வரி கொடுத்துள்ளார்.
ஆனால், தரகர் குத்தகைக்கு வீடு பிடித்து தராமலும் ராஜேஸ்வரி கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றியதுடன், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிக்கரணை காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயனிடம் தான் ரூ.2.50 லட்சத்தை பறிகொடுத்த விவரங்கள் குறித்து ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
அப்போது அவருடன் வந்திருந்த மகள் சத்யஜோதியிடமும் கார்த்திகேயன் விசாரித்தார். விசாரணையில், தனது தாயின் சேமிப்பு பணமான ரூ.2.50 லட்சம் ஏமாற்றப்பட்ட விவரங்களையும் இதனால் முதலாமாண்டுடன் தனது கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்வதாகவும் துணை ஆணையரிடம் சத்யஜோதி அழுதபடி கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது படிப்பை தொடர விருப்பம் தெரிவித்த சத்யஜோதியிடம் பள்ளிக்கரணை பகுதி வியாபாரிகளிடம் நிதியுதவி பெற்று, அவரது தாய் ராஜேஸ்வரியிடம் துணை ஆணையர் கார்த்திகேயன் ரூ.1 லட்சத்துக்கான கல்வி நிதியுதவியை காசோலையாக வழங்கினார்.
அவருக்குத் தாயும் மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
ராஜேஸ்வரி அளித்த புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் காவலர்களுக்குத் துணை ஆணையர் உத்தரவிட்டார்.

