சென்னை: தமிழகத்தில் மிக விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி துணை ராணுவப்படையினர் வரவிருக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விரிவாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் இறுதியாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான நடைமுறையின்படி, ஒவ்வொரு தேர்தலிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தத் தேர்தலுக்காகவும் துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வருகைதர உள்ளனர்.
தேர்தலையொட்டி முதற்கட்டமாக துணை ராணுவப் படையினர் 50 பேர் அனுப்பப்பட உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வழக்கமாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ஓரிரு நாள்களுக்கு முன்பு துணை ராணுவப் படையினர் சம்பந்தப்பட்ட தொகுதி அல்லது மாநிலத்துக்குச் செல்வது வழக்கம். தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடியும் வரை அவர்கள் அதே பகுதியில் முகாமிட்டிருப்பர்.
தேர்தல் சமயத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மாநிலக் காவல்துறையுடன் இணைந்து தீவிர சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணிகளைத் துணை ராணுவத்தினர் மேற்கொள்வர்.

