அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்: அரசு விருப்பம்

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்: அரசு விருப்பம்

2 mins read
acec1c6a-23c6-4e07-8107-cea3527081ed
தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக திட்டக்குழு உறுப்பினர் சுதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே மூன்று பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தமிழக திறன் மேம்பாட்டு மாநாடு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திட்டக்குழு உறுப்பினர் சுதா, உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப, கல்வி வழங்குவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றார்.

“தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு விரும்புகிறது.

“ஏற்கெனவே மூன்று பல்கலைக்கழகங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்றாலும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த விரும்புகிறோம்,” என்றார் சுதா.

உயர்கல்வி முடித்து வேலைக்குச் செல்லும்போது திறம்படச் செயல்பட, பள்ளிப் படிப்பின்போதே திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு கருதுகிறது என்றும் அதற்கேற்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாட்டில், தமிழகம் முன்னணியில் உள்ளது என அவர் மேலும் கூறினார்.

மாநாட்டில் பேசிய இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம், தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப பொறியாளர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

“தமிழகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறையின் பங்கு 20 விழுக்காடு. 89% இளைஞர்கள் படிக்கும் போதே, தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். ‘நான் முதல்வன்’ திட்டம் வாயிலாக, மாணவர்களுக்கு சிறந்த முறையில் திறன் மேம்பாட்டு பயற்சி வழங்கப்படுகிறது,” என்றார் ஸ்ரீவத்ஸ்ராம்.

படித்து முடித்து வேலைக்கு செல்வோருக்கு பயிற்சி அளிக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், தொழிற்சாலைகளின் தேவை அறிந்து, அதற்கேற்ப கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
பல்கலைக்கழகம்செயற்கை நுண்ணறிவுகல்லூரி