தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் களம்

தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் களம்

3 mins read
15e5168f-5e07-4dca-b7cf-bd65e271bfdf
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடையும் முன்னேற்றம் தேசிய அளவில் இண்டியா கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்று பேசப்படுகிறது. - படம்: தி இந்து

இன்னும் பத்து நாள்களில் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தேசிய அரசியலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, இந்தியாவின் முக்கிய அரசியல் களங்களில் ஒன்று. தென்னிந்தியாவில் கால்பதிக்கத் துடிக்கும் பாஜகவுக்கும் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திவரும் திராவிட அரசியலுக்கும் இடையிலான ஒரு பெரும் மோதலாக இத்தேர்தல் கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பாஜக அடையும் முன்னேற்றம், திமுக முக்கிய அங்கமாக உள்ள இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்தக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.

ஒருவேளை திமுகவே மீண்டும் வென்றால், அது தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறிக்கோள்களுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும்.

இந்தியாவிலேயே ஐந்தாவது அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

2029 மக்களவைத் தேர்தலுக்கான தென்னகத்து நுழைவாயிலாக அதனை பாஜக கருதுகிறது. 39 தொகுதிகளில் 10 முதல் 20 இடங்களைக் கைப்பற்றுவதுகூட மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உதவும் என்பது அதன் கணக்கு.

2024 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களிலும் திமுக கூட்டணியே வென்றது. அதனை இந்த முறை புரட்டிப்போட பாஜக திட்டமிடுகிறது. குறிப்பாக, தனது வாக்கு வங்கியை 11 விழுக்காட்டிலிருந்து 20-25 விழுக்காட்டுக்கு உயர்த்தி, குறைந்தது 15 மக்களவைத் தொகுதிகளையாவது உறுதிசெய்ய அக்கட்சி முடிவுசெய்துள்ளது.

கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பலவீனமடைந்துள்ள அதிமுகவுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்த முயல்கிறது பாஜக. அதனால், இந்தத் தேர்தலில் சாதிரீதியான கூட்டணிகள் மற்றும் திமுக எதிர்ப்பு அலை மூலம் 15 முதல் 20 தொகுதிகளை வெல்ல அது இலக்கு வகுத்துள்ளது.

நடைபெற இருக்கும் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கானதாக மட்டுமல்லாமல், மொழிக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 2020ன்கீழ் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆனால், இந்தித் திணிப்பை எதிர்க்கும் திமுக அரசு இருமொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பார்க்கிறது.

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி போன்றோர் தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகவே இந்தத் தேர்தலைச் சித்திரிக்கின்றனர். பாஜக அதிக இடங்களில் வென்றால் தமிழ், ஆங்கிலத்துடன் விருப்பமான மூன்றாவது மொழி (இந்தி உட்பட) என்ற கல்விக் கொள்கை வரக்கூடும்.

இந்தத் தேர்தல் முடிவுகள் 2029 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகளில் பெருமாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, இளையர்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு வட்டார வாக்காளர்களின் மனநிலை, இந்திய அரசியலின் போக்கையே மாற்றியமைக்கக்கூடும். மாநில, மத்திய அரசுக்கு இடையிலான பொருளியல் அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டாட்சி தத்துவங்கள் குறித்த விவாதங்களுக்கும் இது ஒரு முற்றுப்புள்ளியாகவோ அல்லது புதிய தொடக்கமாகவோ அமையக்கூடும் என்பதே இப்போதைய கணிப்பு.

இந்தத் தேர்தலுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் வகையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது தமிழகத்தின் வாக்கு வங்கி அரசியலில், குறிப்பாக இளையர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தவெகவால் தனக்குப் பாதிப்பு என்பதைவிட திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்பதே பாஜக தலைமையின் நம்பிக்கை. -திருநா

குறிப்புச் சொற்கள்