முன்பிணை மனு தள்ளுபடி: சிக்கலில் செந்தில் பாலாஜி

முன்பிணை மனு தள்ளுபடி: சிக்கலில் செந்தில் பாலாஜி

2 mins read
f01c99d2-cba7-4fa6-b983-88c5565ea387
செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்: விகடன்
Google News Preferred Icon

சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று வெளியான தகவலால் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பு நிலவியது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கையும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கையும் எதிர்கொள்ள அவர் தமக்கு முன்பிணை வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அம்மனு தள்ளுபடியானது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட ஏழு பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரித்துவரும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை, அண்மையில் சென்னை உட்பட 47 இடங்களில் சோதனை மேற்கொண்டது.

டாஸ்மாக் மது விடுதி ஒப்பந்தப்புள்ளிகள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுப்புட்டி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றன என்பது செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு. இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு மட்டுமல்லாமல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானதால் முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் செந்தில் பாலாஜி. இந்த மனு வியாழக்கிழமை (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது.

வாதங்களைச் செவிமடுத்த நீதிமன்றம், முன்பிணை வழங்க மறுத்து, செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பில் அவரிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

முன்பிணை கோரிய மனு தள்ளுபடியானதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 284 மதுவிடுதிகள் மூடப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டு அவை உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே தொடர்ந்து செயல்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தனிநபர்கள் மற்றும் மதுபான உற்பத்தி, போக்குவரத்து, மதுபுட்டி விநியோக நிறுவனங்களிடமிருந்து முறைகேடான பலன்களைப் பெறும் நோக்கில் செயல்பட்டதாகவும், இதனால் அரசுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்