இல்லத்தரசியின் கண்களில் இன்னொரு சூரிய சாதனை

இல்லத்தரசியின் கண்களில் இன்னொரு சூரிய சாதனை

2 mins read
90601fbe-9e53-473e-8399-6157d91ab465
சீர்காழி தொகுதி மக்களுடன் திருவாட்டி துர்கா ஸ்டாலின். - படம்: இந்து தமிழ் திசை

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ‘ஸ்டாலினுக்குக் கட்டம் சரியில்லை; அவர் முதல்வராக மாட்டார் என ஜாதகம் சொல்கிறது’ என பிரசாரம் செய்தனர்,” என்றார்.

ஊடகங்கள் கொளுத்திப்போட்ட அப்படி ஒரு காலகட்டம் இருந்தது. ஆயினும், அவற்றை எல்லாம் கடந்து முதல்வர் பதவியில் மு.க. ஸ்டாலின் அமர்ந்தார். பதவி ஏற்பின்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என ஸ்டாலின் கூறியபோது, விழாவின் முன்வரிசையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிப்பெருக்கில் கண்கலங்கிய காட்சி, அரசியலுக்கு அப்பால் அனைவரையும் நெகிழச் செய்தது.

தேர்தல் முடிவு வெளிவந்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை திருவாட்டி துர்கா சில ஆண்டுகளுக்கு முன்னர் விகடன் இதழிடம் பகிர்ந்தார்.

“தேர்தல் முடிவு வந்த அன்னிக்கு காலையில் 8 மணிக்கு நான் பூஜை ரூமுக்குள்ள போனதுதான் எனக்குத் தெரியும். அங்கேயேதான் இருந்தேன். எங்க குலதெய்வமான அங்காளம்மன்கிட்டே வேண்டிகிட்டிருந்தேன். அந்த தெய்வத்துகிட்ட பேசிட்டே இருந்தேன். மதியம் 1 மணிவரை அங்கேயே இருந்தேன்,” என்பதுதான் அவரது அந்தப் பகிர்வு.

இப்போதும் ஜாதகக் கட்டம் சொல்வதாக ஒரு தகவல் பரவுகிறது. அதைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்டாலின், “திமுக இரண்டாவது முறையாக இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை என ஜோதிடம் சொல்கிறது. அதையெல்லாம் மீறி, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்,” என்றார்.

முதல் ‘சென்டிமென்’டை உடைக்க தெய்வம் துணை இருந்ததா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இப்போது கிளம்பி இருக்கும் இரண்டாவது ‘சென்டிமென்’டை உடைக்க சீர்காழி தொகுதியை நாடி இருக்கிறார்கள்.

சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெறும் சின்னமே இதுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்பது 1980ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து வரும் வரலாறு. அந்தத் தொகுதியை இம்முறை திமுக தனது கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கியது. மதிமுகவின் நான்கு தொகுதிகளில் சீர்காழியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் என வைகோ அறிவித்தார். பழைய வரலாற்றைத் திமுக தலைமை தாமதமாகப் புரட்டியதா என்பது தெரியவில்லை. மதிமுக சீர்காழியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அண்மையில் வைகோ திடுதிப்பென்று அறிவித்தார்.

சீர்காழியில் உதயசூரியனை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் தீவிரமாகச் செயல்படுவதாகச் சொல்கிறார்கள். சீர்காழியில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இந்த ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்,” என பிரசாரம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

திருவாட்டி துர்காவின் சொந்த ஊரான திருவெண்காடு சீர்காழி தொகுதியில்தான் உள்ளது.

இந்தத் தேர்தலில் இதுவரை எந்த வேட்பாளருக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிக்காத திருவாட்டி துர்கா ஸ்டாலின், சீர்காழி தொகுதியில் மக்கள் சந்திப்பு நடத்தி அங்கு உதயசூரியன் வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சீர்காழியில் வென்றால்தான் திமுக ஆட்சி அமையும் என்ற ‘சென்டிமென்’டை அவர் நம்புவதுதான் இந்தளவுக்கு தீவிரமாகக் களமிறங்கியதற்குக் காரணம் என்கிறார்கள். திருவாட்டி துர்காவின் கண்களில் தெரியும் சாதனை, களத்தில் நிகழ்ந்தால் அது புதிய வரலாறு. - திருநா

குறிப்புச் சொற்கள்