பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்

2 mins read
b5ee0331-dff2-4b64-bdcd-2c99ef056a8d
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. - படம்: தமிழ் முரசு
Google News Preferred Icon

சென்னை: சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார். தமது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் இரண்டு முதல் ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருந்தன.

அதில், அண்ணாமலைக்குக் கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணப் பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் புதன்கிழமை (பிப்ரவரி 3) காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அண்ணாமலை.

“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. அதற்குக் காலம்தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட ஆறு தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயணப் பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன்.

“அண்மையில் இந்திய அரசாங்கம் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம் யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு உள்ளது. சிறிய, நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டுமே மத்திய வரவுசெலவுத் திட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்