நாகூர் தர்கா சீரமைப்புக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அன்புமணி வலியுறுத்து

நாகூர் தர்கா சீரமைப்புக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அன்புமணி வலியுறுத்து

2 mins read
5ae95d7a-8872-4a25-b6fd-85f2c8e116e1
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டின் பழைமைவாய்ந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவின் மண்டபங்களைச் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து வருகிறது. இது சரியல்ல என்றும் உடனடியாக இப்பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகூர் தர்காவின் மண்டபங்கள் 350 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவற்றைச் சீரமைக்க ரூ.73 கோடி செலவாகும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே மதிப்பீடு செய்து, நாகூர் தர்காவின் அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், 2022-23ஆம் ஆண்டில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டதே தவிர வேறு எந்த உதவியும் செய்யப்படவில்லை.

நாகூர் தர்காவை சீரமைப்பதற்குத் தேவைப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் அரசு ஒதுக்கிய நிதி யானைப்பசிக்கு சோளப்பொறியை கொடுப்பது போன்று உள்ளது.

தர்கா சீரமைப்புக்கான முந்தைய மதிப்பீடான ரூ.73 கோடி இப்போது மேலும் அதிகரித்து விட்ட நிலையில், நாகூர் தர்கா சீரமைப்புக்காக மாநில அரசு குறைந்தது ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நாகூர் தர்காவின் 469ஆம் கந்தூரி வரும் நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதனைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயங்களை வெளியிடவும், விழாவுக்கு வந்து செல்வோரின் வசதிக்காக நவம்பர் 20 முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து நாகூருக்கு சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மாநில அரசுநடவடிக்கைஒதுக்கீடுநிதி