அன்புமணி: சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை கட்டாயப்படுத்துவது நியாயமல்ல

2 mins read
574dd7fc-311b-4c19-b0a4-ee483d974720
நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு செலவானது? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல என்று கூறியுள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 7 விழுக்காடு சுங்கக்கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைச் சிறப்பாகப் பராமரிக்க வேண்டும். விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள பெரும்பாலான சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 67 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்களைப் பொறுத்து 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும்; ரூபாய் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு மிகவும் அதிகம் ஆகும்.

2008ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்றத் தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு செலவானது? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையறையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என்று திரு அன்புமணி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்