தவெக அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு

அமைச்சரவை மூன்று நாள்களில் விரிவாக்கம்

தவெக அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு

2 mins read
f1ea8b52-c625-4d31-bce9-788609ae1427
தமிழ் நாட்டின் 17வது சட்டமன்றத்தில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. - கோப்புப் படம்: இடிவி பாரத்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டு முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரபூர்வமாக சனிக்கிழமை (மே 16) வெளியிடப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய், காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளையர் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளை தன்னிடமே வைத்துள்ளார்.

அமைச்சர் என்.ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ஒன்றியம், பாசனத் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மூத்த அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித் துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கே.ஜி. அருண்ராஜ் - மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை பொறுப்புகளை ஏற்கின்றனர்.

வெங்கட ரமணன் - உணவு, நுகர்பொருள் வழங்கல் துறை; சிடிஆர் நிர்மல் குமார் - மின்சாரம், சட்டத் துறை; ராஜ் மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை; டி.கே. பிரபு - கனிமவளங்கள், சுரங்கங்கள் துறை; கீர்த்தனா - தொழில் துறை என துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவைத் துறை ஒதுக்கீடு தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை வேகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதி பொறுப்பு ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உட்பட ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, தவெகவுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு இடங்களும், அதிமுகவில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் வெற்றி பெற்று, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

17வது சட்டமன்றத்தில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. ஆளுங்கட்சியான தவெகவுக்கு 26 இடங்கள் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அடுத்த மூன்று நாள்களில் அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்