கூட்டணிக் கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக

கூட்டணிக் கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக

2 mins read
0a1164c9-47e2-46ed-a610-5482df3da170
கடந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 27, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது கவனத்துக்குரியது. - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடைந்துள்ளது.

அதன்படி, கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள அதிமுக, அதில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

பாஜகவுக்கு 27 தொகுதிகளும் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 23) அறிவித்தார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இம்முறை அதிமுக, பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடந்த இரு நாள்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் திங்கட்கிழமை காலை சென்னை வந்தடைந்தார்.

பின்னர் அதிமுக தலைமையகத்துக்கு அவருடன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் சென்றனர்.

அப்போது தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டில் எடப்பாடி பழனிசாமி, தினகரன், நயினார் நாகேந்திரன், அன்புமணி ஆகியோர் திரு பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

கடந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 27, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உள்ளிட்ட சிறிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும் விரைவில் இறுதிசெய்யப்படும் என்றும் அக்கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவிலிருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உட்கட்சிப் பூசல் காரணமாக நீக்கப்பட்டார் டிடிவி தினகரன்.

இந்நிலையில், அக்கட்சித் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக அலுவலகத்துக்கு அவர் சென்றார்.

குறிப்புச் சொற்கள்