சென்னை மாநகராட்சியில் 35 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து

சென்னை மாநகராட்சியில் 35 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து

2 mins read
9a65c844-8807-4c1a-ab88-6033cc86ca1f
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சென்னை மேயர் பிரியா. - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களை முன்கூட்டியே தீர்மானித்தது, திட்டச் செலவு செயற்கையாக அதிகரித்தது போன்ற முறைகேடுகள் காரணமாக அவற்றை ரத்து செய்து நகராட்சி நிர்வாகத் துறையை வைத்திருக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை மாநகராட்சி வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரில் நடைபாதைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதியே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் நான்காவது அவென்யூ, ஜவஹர்லால் நேரு மைதானம் அருகிலுள்ள ராஜா முத்தையா சாலை, கீழ்ப்பாக்கம் பார்னபி சாலை, மயிலாப்பூர் டாக்டர் பி.எஸ். சிவசாமி சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் நடைபாதைகளை அமைக்க இத்திட்டம் 35 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டது.

இரண்டு முதல் மூன்று சாலைகளுக்கான நடைபாதைகள் அமைக்கும் ஒரு தொகுப்புக்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 9 கோடிவரை ஒப்பந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த 35 பணிகளுக்கும் மிகக் குறைந்த விலை கோரிய ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்ட போதிலும், மார்ச் 15ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், மாநகராட்சி தரப்பில் ஆணைகள் வழங்கப்படவில்லை.

இதனிடையே, இந்தப் பணிகளுக்காக செலவு பல மடங்கு அதிகரித்துக் காட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதுதொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தப்புள்ளி விடப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்