ராமநாதபுரத்தில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தமிழி நடுகல்’ கண்டுபிடிப்பு

ராமநாதபுரத்தில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தமிழி நடுகல்’ கண்டுபிடிப்பு

2 mins read
cffccf4b-12c1-416d-8a30-a2b582f34d26
நடுகல்லை ஆய்வுசெய்து அது கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிவித்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் (இடது). உடன் ஆசிரியர் முனியசாமி. - படம்: பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்
multi-img1 of 2
Google News Preferred Icon

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகப் பழைமைவாய்ந்த தமிழி நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு திருப்பணியின்போது அங்கிருந்த சில கற்களை அப்புறப்படுத்தியபோது அந்த நடுகல் தென்பட்டது.

இதையடுத்து, அந்தக் கல்லை அங்குள்ள மரத்தின் அருகே வைத்திருந்தனர். இந்நிலையில், இக்கோவிலில் வழிபாடு செய்யவந்த மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் முனியசாமி அக்கல்லைக் கண்டு மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் தெரிவிக்க, தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம், உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் ஆப்பனூருக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கல்வெட்டைப் படியெடுத்து வாசித்தபோது, அதில் இடம்பெற்றிருந்த தகவல் ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துவரி வடிவத்தில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த நடுகல், வெங்கச் செங்கல் எனும் வகையைச் சேர்ந்த கல் என்றும் பாண்டிய நாட்டில் பாடப்பெற்ற 14 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று என்றும் திரு சாந்தலிங்கம் தெரிவித்தார்.

ஆப்பனூர் என்ற பெயரே 2,000 ஆண்டுகளுக்கு முன்பும் வழக்கத்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதும் அதே பெயரே தொடர்வது என்பது வியப்புக்குரிய தகவல் என்றார்.

இன்றைய ஆப்பனூர் என்பது முதுகுளத்தூரில் இருந்து கடலாடி செல்லும் சாலையில் வலப்புறமாக அமைந்துள்ளது. இது ஆப்பநாட்டின் தலைநகராகும்.

“கல்வெட்டில், ‘ஆ பன்னூர் ஏறிய மாண்டு விழுந்த அத்தியன் கீரன்கல்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஆப்பனுார் மேல் சண்டையிட்டு மாண்டு விழுந்துபோன வீரன் அத்தியன் கீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பது இந்தக் கல்வெட்டின் பொருளாகும்,” என்று திரு சாந்தலிங்கம் விளக்கமாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்