14ஆம் நூற்றாண்டுப் பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

14ஆம் நூற்றாண்டுப் பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

2 mins read
4aae5d5a-35b4-4de3-a5c6-2bd22d083b64
கண்டெடுக்கப்பட்ட பெண் தெய்வச் சிலை. - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே கொடிவேரி அணைப் பகுதியில் பழைமையான கற்சிலை இருப்பதாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியைச் சோ்ந்த தமிழ்த் துறைத் தலைவா் ரவின்குமாா், உதவிப் பேராசிரியா் கனகராஜ், இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி வா்ஷினி ஆகியோா் ஈரோடு அரசு அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் ஜென்சிக்குத் தகவல் அளித்தனா்.

அதன்பேரில் கொடிவேரி அணைப் பகுதியில் இருந்த கற்சிலையை கொடிவேரி கிராம நிா்வாக அலுவலா் சரவணன் முன்னிலையில் ஜென்சி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் சம்பந்தப்பட்ட கற்சிலை 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை என்பது தெரியவந்தது.

இதுகுறித்துப் பேசிய ஜென்சி, “கொடிவேரி அணைப் பகுதி அருகே உள்ள ஆற்றுமணல் பகுதியில் முட்புதா்களுக்கு இடையில் மணலில் புதைந்தவாறு 41 சென்டிமீட்டர் உயரமும் 28 சென்டிமீட்டர் அகலமும், 3 சென்டிமீட்டர் கணமும் கொண்ட உருவ கற்சிலை ஒன்று தனியாா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ரவின்குமாா் மற்றும் அவரது குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது.

“பின்னா் அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிலையை ஆய்வு செய்தபோது அது 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. மேலும், உருவக் கல்லின் சிறப்புகளாக எட்டு கைகளும் ஈட்டியுடன் மனித உருவத்தைக் காலில் வதம் செய்வதுபோன்ற உக்கிரமான கண்களும் இயல்பு தன்மைக்கு மாறான பெரிய காதுகளும் உள்ளன. கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் பெண் தெய்வச் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது,” என்றாா்.

இயல்புக்கு மாறான பெண் தெய்வச் சிலை, கொடிவேரிக்கு வரும் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்