விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப்பணி: அமைச்சர் உதயநிதி

2 mins read
9321d04a-5134-41df-b496-efaa989ecd50
கும்பகோணத்தில், கலைஞர் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  இளைஞர் நலன், விளையாட்டு, சிறப்புத் திட்டச் செயலாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்குக் விளையாட்டுச் சாதனங்களை வழங்கினார். - படம்: ஊடகம்

கும்பகோணம்: அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் பணி வழங்கப்படவுள்ளதாக இளைஞர் நலன், விளையாட்டு, சிறப்புத் திட்டச் செயலாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கலைஞர் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரையாற்றினார்.

அப்பாது, “கலைஞர் விளையாட்டுச் சாதனங்கள் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படவுள்ளன,” என்றார் அமைச்சர் உதயநிதி.

மேலும், “தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு சாதனங்கள் வழங்கும் திட்டம் இதுவரை 13 மாவட்டங்களில் செயல்படுத்தபட்டு உள்ளது. அண்மையில் நடந்த ‘கேலோ’ விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது,”என அவர் கூறினார்.

கும்பகோணத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அனைத்துலக தடகள வீராங்கனை ரோசி மீனா, தேசிய ஹாக்கி வீரர் நந்தக்குமார் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, மாங்குடியில் மொழிப்போர் தியாகி ரத்தினம் உருவச் சிலையையும் வளையப்பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் நூலகத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குறிப்புச் சொற்கள்