'நானே முதல்வன்! எனக்குப் பின்னால்தான் கோஹ்லி'

'நானே முதல்வன்! எனக்குப் பின்னால்தான் கோஹ்லி'

2 mins read
0f1c5cbc-aaa1-490f-b9f6-46e1c3cc9786
முதல்தர ஒருநாள் போட்டிகளில் கோஹ்லியைவிட (வலப்படத்தில் வலது) தனது செயல்பாடு சிறப்பானது என்கிறார் குர்ரம் மன்சூர். படம்: ஊடகம் -
Google News Preferred Icon

இஸ்லாமாபாத்: கிரிக்கெட் விளையாட்டில் உலகின் முன்னணிப் பந்தடிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் இந்திய அணியின் முன்னாள் தலைவரான விராத் கோஹ்லி.

கடந்த மூவாண்டுகளாக ஒருமுறைகூட நூறு ஓட்டங்களைத் தொடாத அவர், தான் ஆடிய கடைசி ஏழு ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசி, தமது ஆட்டத்திறனை மீட்டெடுத்துள்ளார்.

இப்போது 35 வயதாகும் கோஹ்லி, அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தோர் பட்டியலில் இந்தியப் பெருமகன் சச்சின் டெண்டுல்கருடன் (49 சதங்கள்) இணைய இன்னும் மூன்று சதங்களே தேவை.

இந்நிலையில், முதல்தர ஒருநாள் போட்டிகளில் (List A) கோஹ்லியைக் காட்டிலும் தனது சாதனை மேம்பட்டது என்று கூறியிருக்கிறார் பாகிஸ்தான் வீரரான 36 வயது குர்ரம் மன்சூர்.

கோஹ்லியுடன் தன்னை ஒப்பிடுவது தனது நோக்கமன்று என்று தெளிவுபடுத்திய மன்சூர், ஆனாலும் 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் கோஹ்லியைவிட தான் அதிக சாதனைகள் படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

"உண்மையில், 50 ஓவர் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடங்களுக்குள் யார் இருந்தாலும் சரி, உலக அளவில் எனக்குத்தான் முதலிடம். கோஹ்லி எனக்குப் பின்னால்தான் வருவார். சராசரியாக, கோஹ்லி ஆறு போட்டிகளுக்கு ஒரு சதம் அடித்துள்ளார். ஆனால், நான் 5.68 போட்டிகளுக்கு ஒரு சதம் அடித்துள்ளேன். இது உலக சாதனை. கடந்த பத்தாண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் எனது சராசரி 53 ஓட்டங்கள். அவ்வகையில், உலகத் தரவரிசையில் நான் ஐந்தாவதாக உள்ளேன்," என்று வலையொளி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோது மன்சூர் கூறினார்.

உள்ளூர்ப் போட்டிகளில் தொடர்ந்து ஓட்டம் குவித்து வந்தாலும், தேசிய அணித் தேர்வாளர்கள் தம்மைப் புறக்கணிப்பதாக அவர் சாடினார்.

"கடைசியாக விளையாடிய 48 இன்னிங்ஸ்களில் 24 சதங்களை அடித்துள்ளேன். 2015 முதல் இப்போதுவரை, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களைப் பொறுத்தமட்டில், அதிக ஓட்டம் குவித்தோரில் நானே முன்னிலையில் இருக்கிறேன். தேசிய அளவிலான டி20 போட்டிகளிலும் நானே அதிக ஓட்டம் குவித்தவன். ஆனாலும், தேசிய அணியில் எனக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 8-9 சாதனைகள் படைத்திருக்கிறேன்," என்றார் மன்சூர்.

கடைசியாக 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் சார்பில் களமிறங்கிய அவர், அவ்வணிக்காக இதுவரை 16 டெஸ்ட், ஏழு ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

மன்சூர் இப்படிக் கூறியதையடுத்து, இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

"மன்சூரை அவரது மாவட்டத்தில் இருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. இப்போது உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அவரது பெயர் தெரிந்துவிட்டது. நோக்கமும் நிறைவேறிவிட்டது," என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், "விரைவில் தேறி வாருங்கள் மன்சூர்," என்று குறிப்பிட்டுள்ளார்.