நியூயார்க்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.
முதலில் பந்தடித்த நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இறுதியில் அது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
எளிதான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்கா 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து பரிதாபமான நிலையில் தத்தளித்தது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த டேவிட் மில்லர் பொறுமையாக விளையாடி 59 ஓட்டங்கள் குவித்தார்.
மில்லருக்குத் துணையாக நின்ற டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 33 ஓட்டங்கள் எடுத்தார். 18.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா வெற்றி இலக்கை எட்டி அதன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்தது.
இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்றிருந்தாலும் தென்னாப்பிரிக்காவின் பந்தடிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அடுத்த சுற்றில் இது அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

