லண்டன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் ஸ்பெயினின் ரியால் மட்ரிட், ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
சிறப்பாக விளையாடிய டோர்ட்மண்ட்டை எதிர்கொண்டு 15வது முறையாக ரியால் யுசிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சனிக்கிழமை (ஜூன் 1) நள்ளிரவுக்குப் பிறகு இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் உள்ள வெம்பிளி விளையாட்டரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியாலின் டெனி கர்வாயால், வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
இரு கோல்களும் ஆட்டத்தின் 70வது நிமிடத்துக்குப் பிறகுதான் விழுந்தன. 74வது நிமிடத்தில் கர்வாயால் ரியாலை முன்னுக்கு அனுப்பினார். பிறகு வினிசியஸ் இரண்டாவது கோலைப் போட்டார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்ற குழு என்ற பெருமை ரியாலுக்கு உள்ளது. அந்த நற்பெயரை நிலைநாட்டும் வண்ணம் அது மறுபடியும் வாகை சூடியது.
முற்பாதியாட்டத்தில் டோர்ட்மண்ட் பல கோல் வாய்ப்புகளைக் நழுவவிட்டது ரியாலுக்கு சாதகமாக அமைந்தது.

