இபிஎல்: வெற்றிக்காகப் போராடும் லிவர்பூல்

இபிஎல்: வெற்றிக்காகப் போராடும் லிவர்பூல்

2 mins read
bb0b1757-df06-4b66-831c-10943704b02c
அண்மையில் லிவர்பூல், வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் ஆட்டத்தில் லிவர்பூல் அணியும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியும் மோதுகின்றன.

சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் இரவு 11:30 மணிக்கு இடம்பெறுகிறது.

கடந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியைத் தவறவிட்ட லிவர்பூல் அணி ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெறp போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவர்dடன் உடனான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்ற லிவர்பூல், வெஸ்ட் ஹேம் அணிக்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. இந்த இரு ஆட்டங்களின் முடிவுகளும் லிவர்பூல், பிரிமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு தடைக்கல்லாக அமைந்தன.

அதனால், ஸ்பர்ஸ் அணிக்கு எதிராக லிவர்பூல் முழு வலிமையையும் காட்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

மறுபக்கம் ஸ்பர்ஸ் அணியும் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய மூன்று பிரிமியர் லீக் ஆட்டங்களிலும் படுதோல்வியைத் தழுவியது. அதனால் இந்த ஆட்டத்தில் லிவர்பூலை வீழ்த்தி, மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப ஸ்பர்ஸ் திட்டமிடலாம்.

புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ், பருவ முடிவில் நான்காவது இடத்தில் முடிக்கப் போராடும். அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.

இந்நிலையில், லிவர்பூல் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் தயாராக வேண்டும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யர்கன் கிளோப்பின்கீழ் சிறப்பாக விளையாடிய நாள்களை எண்ணி எதிர்காலத்தைக் கோட்டைவிடக்கூடாது என்றும் அடுத்த நிர்வாகியாக வரும் ஆர்னி ஸ்லோத்திற்கு ஏற்றவாறு அணி வீரர்கள் மாற வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் இரு ஆட்டங்கள் நடக்கின்றன. ஓர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவும் பிரைட்டனும் மோதுகின்றன. மற்றோர் ஆட்டத்தில் செல்சி அணியை வெஸ்ட் ஹேம் அணி எதிர்கொள்கிறது. இந்த இரு ஆட்டங்களும் சிங்கப்பூர் நேரப்படி இரவு 9 மணிக்கு இடம்பெறுகின்றன.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் குழு 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 79 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது. லிவர்பூல் 75 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் ஆஸ்டன் வில்லா 67 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்