தோல்விகளால் மனமுடைந்த ஆர்சனல், லிவர்பூல்

தோல்விகளால் மனமுடைந்த ஆர்சனல், லிவர்பூல்

2 mins read
d3ae0d4f-fe3c-4fef-9ec1-93967ffffc73
கடுமையாகப் போராடியும் பலனின்றி தோல்வியைச் சந்தித்த ஆர்சனல் குழுவின் ஆட்டக்காரர்கள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வெல்லும் ஆர்சனல் குழுவின் முயற்சியில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் ஆர்சனலின் சொந்த திடலில் ஆஸ்டன் வில்லா 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனலைத் தோற்கடித்தது.

வில்லாவின் கோல்களை லியோன் பெய்லியும் ஒல்லி வாட்கின்சும் போட்டனர். கடந்த 12 ஆட்டங்களில் ஆர்சனல் சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெய்லி, வில்லாவின் முதல் கோலைப் போட்டார். மூன்று நிமிடங்கள் கழித்து வாட்கின்ஸ் இரண்டாவது கோலைப் போட, ஆர்சனல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் விளையாட்டரங்கை விட்டு வெளியேறினர்.

இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சனல் மான்செஸ்டர் சிட்டியைவிட இரண்டு புள்ளிகள் குறைந்த நிலையில் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மற்றொரு தோல்வியைச் சந்தித்த லிவர்பூல் குழு பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

“இதுபோன்ற தருணம் வரக்கூடும் என்று எதிர்பார்த்தோம். இப்போது அது குறித்து வருத்தப்படுவதை விடுத்து, அடுத்து நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்,” என்று ஆர்சனல் நிர்வாகி மிக்கேல் ஆர்டெட்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, தனது சொந்த அரங்கில் கிறிஸ்டல் பேலஸ் குழுவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட லிவர்பூல் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் ஆண்டி ராபர்ட்சன், விருதை வெல்லும் தங்கள் கனவை அடைய வேண்டுமானால் லிவர்பூல் குழு இனி வரும் ஆட்டங்களில் தோல்வி காணக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

ஆட்டத்தின் ஒரே கோலை பேலஸ் குழுவின் எபிரெச்சி எஸே ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் போட்டார். இந்தத் தோல்வியின் மூலம் லிவர்பூல் ஆர்சனல் குழுவைப் போல 71 புள்ளிகள் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தில் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இன்னும் ஆறு ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில், மான்செஸ்டர் சிட்டி 73 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்