மீண்டும் அனல் பறக்கும் மேன்யூ-லிவர்பூல் ஆட்டம்

மீண்டும் அனல் பறக்கும் மேன்யூ-லிவர்பூல் ஆட்டம்

2 mins read
9ba2836b-7ba0-43e6-b933-f63490e1e8fb
எது எப்படி இருப்பினும் மேன்யூ-லிவர்பூல் ஆட்டத்தில் எப்போதும் போல அனல் பறக்கும் என்பது காற்பந்து ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. - படம்: இணையம்
Google News Preferred Icon

மான்செஸ்டர்: செல்சியுடனான இங்கிலிஷ் பிரிமியல் லீக் ஆட்டத்தில் கடைசி நில நிமிடங்களில் வெற்றியைக் கைவிட்ட மான்செஸ்டர் யுனைடெட் (மேன்யூ குழு, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) பலம் வாய்ந்த லிவர்பூல் குழுவைச் சந்திக்கிறது.

ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, செல்சி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியைக் கவ்வியது. அடுத்து லிவர்பூல் குழுவுடனான ஆட்டத்தில் முடிவு, மேன்யூவுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அடுத்த பருவத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால் மேன்யூ, லிவர்பூலை வெற்றி காண வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது.

காரணம், தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள லிவர்பூல் தனது ஆட்டங்களில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் அது மேன்யூவிடம் கடைசி நிமிடத்தில் தோல்வி கண்டதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையிலும் லிவர்பூல் களம் இறங்கும்.

காயம் காரணமாக மேன்யூவின் விக்டர் லிண்டலோஃப், லிசாண்ட்ரோ மார்டினேஸ் இருவரும் குறைந்தது அடுத்த ஒரு மாதத்துக்கு விளையாட முடியாது. செல்சியுடனான ஆட்டத்தில் ரஃபாயல் வெரேனுக்கும் காயம் பட்டிருப்பதுபோல தெரிகிறது. அவருக்குப் பதிலாக ஜானி ஏவன்ஸ் விளையாட வந்தார். அப்படி என்றால் எஞ்சியிருக்கும் கம்ப்வாலாவும் ஹேரி மெக்குவாயரும் மத்திய தற்காப்பு ஆட்டக்காரர்களாகக் களம் இறக்கப்படலாம்.

லிவர்பூல் குழுவை எடுத்துக்கொண்டால், கடந்த விழாயக்கிழமை 3-1 என்ற கோல் கணக்கில் ஷெஃபில்டு யுனைடெட் குழுவைத் தோற்கடித்து, பட்டியலில் தனது இடத்தைப் பலப்படுத்திக் கொண்டது.

அக்குழுவிலும் சில திறமையான ஆட்டக்காரர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். ஜோயல் மட்டிப், தியோகோ அல்கன்டாரா, டிரன்ட் அலெக்சாண்டர்-ஆர்னல்டு, அலிசன் பேக்கர், டியாகோ ஜோட்டா ஆகியோர் அதில் அடங்குவர். விரைவில் இவர்கள் பயிற்சிக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பலம் வாய்ந்த வழக்கமான ஆட்டக்காரர்கள் லிவர்பூல் குழுவின் தாக்குதலை வழிநடத்துவார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. எது எப்படி இருப்பினும் மேன்யூ-லிவர்பூல் ஆட்டத்தில் எப்போதும் போல அனல் பறக்கும் என்று காற்பந்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்