ஆசியக் கிண்ணம்: காஸா போரால் பாலஸ்தீன அணிக்கு பாதிப்பு

ஆசியக் கிண்ணம்: காஸா போரால் பாலஸ்தீன அணிக்கு பாதிப்பு

1 mins read
613def23-d994-4ab1-bdea-af2e1e5e2389
இஸ்ரேலிய தாக்குதலால் அழிந்துபோன வீடு. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜெருசலம்: ஆசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டி ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.

கத்தாரில் நடைபெறவுள்ள போட்டியில் பாலஸ்தீன அணி, அதன் முதல் ஆட்டத்தில் ஈரானுடன் மோதவுள்ளது. ஆனால், காஸா போரால் ஜனவரி 14ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் அந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த பாலஸ்தீன அணி சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன விளையாட்டாளர்கள் சிலரின் குடும்பத்தாரும் கொல்லப்பட்டோரில் அடங்குவர்.

“பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஹோட்டலில் இருக்கும்போதும் அனைவரும் செய்திகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்,” என்றார் பாலஸ்தீன அணியின் பயிற்றுவிப்பாளர் மக்ராம் டபூப். சவூதி அரேபியாவில் இருக்கும் அவர் இவ்வாறு சொன்னார். பாலஸ்தீன அணி அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தங்கள் குடும்பத்தாரை நினைத்து விளையாட்டாளர்கள் எப்போதும் கவலையுடன் இருப்பதாகவும் டபூப் தேரிவித்தார். சில பாலஸ்தீன விளையாட்டாளர்களின் குடும்பத்தார் காஸாவில் சிக்கியிருப்பதாகவும் அவர்களின் வீடுகள் அழிந்துபோய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் அவதிப்படுகின்றனர்,” என்று டபூப் வருத்தம் தெரிவித்தார்.

எனினும், நெருக்கடியான காலத்திலும் ஆசிய கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலிருந்து முன்னேறி பாலஸ்தீன காற்பந்துக்குப் பெருமை சேர்க்கும் எண்ணத்துடன் தனது அணி இருப்பதாக டபூப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்