சாதனைப் பயணத்தைத் தொடரும் கேன்

சாதனைப் பயணத்தைத் தொடரும் கேன்

1 mins read
39e99d85-24d8-411f-b455-e3a39c4f957a
பயர்ன் மியூனிக் நட்சத்திரம் ஹேரி கேன். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கொலோன்: ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவில் தனது கோல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறார் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் ஜேரி கேன்.

கொலோன் குழுவுக்கு எதிரான ஜெர்மானிய லீக் (புண்டஸ்லிகா) ஆட்டத்தில் பயர்ன் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார் கேன்.

ஜெர்மனியில் ஆக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரரும் (109.07 மில்லியன் வெள்ளி) இங்கிலாந்து அணித்தலைவருமான கேன் புண்டஸ்லிகாவில் பயர்னின் முதல் 12 ஆட்டங்களில் 18 கோல்களைப் போட்டுள்ளார். அந்த லீக்கில் இதுவரை எந்த விளையாட்டாளரும் இவ்வளவு சீக்கிரமாக இத்தனை கோல்களைப் போட்டதில்லை.

மேலும், ஒரு பருவத்தில் புண்டஸ்லிகாவில் 18 கோல்களைப் போட்ட முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் முன்னாள் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் விளையாட்டாளரான கேன் பெற்றுள்ளார். இப்பருவம் இன்னும் பாதிக் கட்டத்தையே நெருங்கவில்லை.

புண்டஸ்லிகாவின் நடப்பு வெற்றியாளரான பயர்ன், கடந்த 10 பருவங்களாகத் தொடர்ந்து லீக் கிண்ணத்தை வென்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்