ஒரே ஆட்டத்தில் இரு புதிய சாதனைகளைப் படைத்த ரோகித்

ஒரே ஆட்டத்தில் இரு புதிய சாதனைகளைப் படைத்த ரோகித்

2 mins read
e92e470a-fbf1-482b-b9b5-13b6f445a4ed
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது 13வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

போட்டி தொடங்கியதில் இருந்து வீரர்கள் பல சாதனைகள் படைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மாவும் இணைந்து கொண்டார்.

புதன்கிழமை மாலை டெல்லி விளையாட்டரங்கில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

பூவா தலையாவில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித்தது.

அந்த அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 272 ஓட்டங்களை எடுத்தது. ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஓட்டங்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவுடன் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறிய ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார்.

அவர் 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் ஆட்டத்தில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தார். அதன் மூலம் அனைத்துலக கிரிக்கெட் ஆட்டங்கள் அனைத்திலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா.

ரோஹித் சர்மா இதுவரை 556 சிக்சர்கள் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெய்ல் (553 சிக்சர்கள்) உள்ளார். பாகிஸ்தானின் ‌‌‌‌ஷகித் அஃப்ரிடி (476 சிக்சர்கள் ) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஆட்டத்தில் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி இலக்கை 35 ஓவர்களில் எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறிப்புச் சொற்கள்
கிரிக்கெட்உலகக் கிண்ணம்