பாலியல் காணொளி: காற்பந்து வீரர்கள் மூவர் கைது

1 mins read
6da1a432-c325-4e66-b88b-0b161f96cfbd
ரியால் மட்ரிட் குழுவின் சான்டியாகோ பெர்னபாவ் விளையாட்டரங்கம். - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை அடையாத பெண் இடம்பெறும் பாலியல் காணொளியை சில காற்பந்து விளையாட்டாளர்கள் விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அச்செயலைப் புரிந்ததாக நம்பப்படும் பிரபல ஸ்பானிய காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட்டைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான விளையாட்டாளர்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச வயதைத் தாண்டியவர்கள். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களின் கைப்பேசிகளில் இருந்த பதிவுகள், காணொளிகள், படங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தனது 16 வயது மகள் பாலியல் உறவில் ஈடுபட்டது காணொளியில் பதிவிடப்பட்டதாகக் கூறி கேனரி தீவுகளில் இருக்கும் ஒரு மாது புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் தலைதூக்கியதாகக் காவல்துறை கூறியது.

ஸ்பானிய காற்பந்தில் பாலினப் பாகுபாடு மோசமாக இருப்பதாக அண்மைக்காலமாக சர்ச்சை எழுந்துவரும் நிலையில் இந்த விவகாரம் தலைதூக்கியுள்ளது.

பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாக நம்பப்படும் ஸ்பெயின் காற்பந்துச் சங்கத் தலைவராக இருந்த லூயிஸ் ருபியாலெஸ் அண்மையில் பதவி விலகினார்.

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெற்றிகண்ட ஸ்பெயினின் ஜெனி ஹர்மோசோ எனும் வீராங்கனையின் உதடுகளில் ருபியாலெஸ் முத்தமிட்டதையடுத்து சர்ச்சை எழுந்தது.

குறிப்புச் சொற்கள்