40 ஆண்டுகளாக சொரியாசிஸ் தோல்நோய் இருந்தும், அதை தடங்கலாகப் பார்க்காமல் வாழ்க்கையை வாழும் பெண்மணி
சொரியாசிஸ் என்ற தோல்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் குமாரி ஃபுளோரன்ஸ் நாதன். இருப்பினும் 70 வயதான இவர், அந்த நோயை ஒரு தடையாகக் கருதாமல் தன் வாழ்க்கையை தான் விரும்பியபடி மகிழ்ச்சியுடனும் முழுமையாகவும் வாழ உறுதி பூண்டுள்ளார்.
விதவிதமான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுப்பதில் அவருக்கு அலாதி இன்பம். நோயின் தாக்கம் அதற்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை என்கிறார் குமாரி நாதன்.
நாற்பது ஆண்டுகளாக இந்தத் தோல் நோயுடன் அவதிப்படும் இவர், அந்த வலியையும் வேதனையையும் பொருட்படுத்தாமல், ஆக்ககரமான வாழ்க்கைக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார்.
சிறு வயதில் குமாரி நாதனுக்கு மாடலிங் பற்றி பத்திரிகைகளில் படிக்க ஆசை.
படங்களுக்கு 'போஸ்' கொடுக்க பிடிக்கும் என்று சிரித்துக்கொன்டே கூறினார். திருமணம் புரிந்துகொள்ளாத இவருக்கு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து புதிய மனிதர்களைச் சந்திக்க பிடிக்கும்.
குமாரி நாதனுக்கு 32 வயதாக இருக்கும்போது, அவருக்கு உடம்பு, தலை முழுவதும் சிவப்பு கொப்பளங்கள் தோன்ற ஆரம்பித்தது. அவரின் முடி உதிர தொடங்கியது. நகங்கள் தடினமாகியதால் அவரால் நகங்களில் ஒப்பனை செய்ய முடியவில்லை. தோல் உரிய தொடங்கியதோடு, அவருக்கு மூட்டுகளில் வலி ஏற்பட ஆரம்பித்தது.
அந்த வலி ஏற்பட்ட சமையத்தில், அவருக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததால், அவர் தன் நோயை பாரமாக எடுத்துக்கொள்ளவில்லை.
இருப்பினும், காலில் உள்ள கொப்பளங்களையும் காயங்களையும் மறைக்க காலுறைகளை அணிவது பற்றி யோசித்தார். இறுதியில், இவர் தனது புதிய உருவத்தை மனமார ஏற்றுக்கொண்டு, அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆரம்பித்தார்.
தற்பொழுது இவர் சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் தோல் நிலையை பொறுத்து, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை அவர் ஒளிக்கதிர் சிகிச்சை பெறுகிறார். 1990 ஆண்டுக்கு பின் இந்த சிகிச்சையை பெற்று வருகிறார்.
பல ஆண்டுகளாக, குமாரி நாதன் தனது நோயுடன் தன்னம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொண்டார்.
சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனந்தளர கூடாது என்றும் மற்றவர்களுக்கு இந்த நோய் குறித்துச் சொல்லும் போது, அவர்களும் இந்த கொப்பளங்களைப் பற்றி நாளடைவில் பொருட்படுத்தமாட்டார்கள் என்று வலியுறுத்தினார். இவரின் கதை பாதிக்கபட்ட மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று குமாரி நாதன் நம்புகிறார்.
சொரியாசிஸ்
எக்ஸிமா எனப்படும் அரிக்கும் தோலழற்சி என்று தவறாக கருதப்படும் சொரியாசிஸ், சிங்கப்பூரில் சுமார் 40,000 பேரைப் பாதிக்கிறது என்று தேசிய தோல் மையத்தின் ஆலோசகர் வாங் டிங்யுவான் பகிர்ந்துகொண்டார்.
எக்ஸிமாவால் தோலில் வீக்கம் ஏற்படும். வறண்ட, சிவப்பு, அரிக்கும் தோலுடன் இது வெளிப்படலாம். மோசமான நிலைகளில், தோலிலிருந்து சீழ் அல்லது ரத்தம் கசியும்.
இதுபோல், சொரியாசிஸால் பாதிக்கப்பட்ட தோலில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்புப் புண்கள் தோன்றும். முழங்கை, முழங்கால் போன்ற தோல் மடிந்த இடங்களில் இந்தப் புண்கள் ஏற்படலாம். தோல் வறண்ட நிலையில், செதில்கள் காணப்படும். ஆனால், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவ வாய்ப்பில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் தோல் உரிதல், தடினமான நகங்கள், முடி வளரும் இடங்களில் கொப்பளங்கள் எதிர்கொள்ளலாம்.
சொரியாசிஸ் மூட்டுவலி நோய்க்கு வழிவகுக்கும். மேலும், இது நீரிழிவு நோய், இரத்தத்தில் அதிக கொழுப்பு, இரத்த அழுத்த நோய், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.
ஒருவரின் அடையாளத்தைப் பாதிக்கும் வகையில் காயங்கள் இருப்பதால், அவரது சமூக வாழ்க்கை மற்றும் உறவு முறைகள் பாதிக்கக்கூடும்.
இதில், சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனஉளைச்சல், மனஅழுத்தம் போன்ற மனநல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அபாயத்திற்கு ஆளாக நேரிடும்.
குடும்ப வரலாறு, சுற்றுச்சூழல் காரணங்களால் சொரியாசிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார் சாங்கி பொது மருத்துவமனையின் தோல் மருத்துவரான உதவி பேராசிரியர் டான் கி வெய்.
சாங்கி பொது மருத்துவமனை ஆண்டிற்கு 500 முதல் 700 வரை சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறது. இந்த எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதையும், இது உலகப் போக்குடன் ஒத்துள்ளது என்று பேராசிரியர் டான் கூறுகிறார்.
16 மற்றும் 22 வயதிற்கு இடைப்பட்ட இளம் வயதினர், அல்லது பிற்காலத்தில் 57 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு சொரியாசிஸ் நோய் வரலாம்.
சொரியாசிஸ் நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை. எனினும், ஸ்டீராய்டு மருந்துகள், வைட்டமின் டி மருந்துகள், ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் பயனளிக்கக்கூரும்.
சொரியாசிஸ் நோய்க்கு வழக்கமான சிகிச்சையான ஒளிக்கதிர் சிகிச்சை பல தனியார் தோல் மருந்தகங்களிலும் வழங்கப்படுகிறது. தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து, ஒருமுறை ஒளிக்கதிர் சிகிச்சை செய்துகொள்ள குறைந்தபட்சம் $100 ஆகும். சருமத்தில் உள்ள அதிகப்படியான நோயெதிர்ப்பு உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த சிகிச்சை பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

