பிஎஸ்ஜி காற்பந்துக் குழு சார்பில் தமது கோல் கணக்கைத் தொடங்கினார் மெஸ்ஸி
பாரிஸ்: மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா சொன்னபடியே, இப்போதைக்கும் காற்பந்து விளையாட்டில் தானே சிறந்த ஆட்டக்காரர் என்பதை மெய்ப்பித்தார் இப்போது பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்காக விளையாடிவரும் லயனல் மெஸ்ஸி.
பார்சிலோனா குழுவின் நிர்வாகியாகத் தாம் இருந்தபோது, இளம் வீரராக இருந்த மெஸ்ஸியிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தச் செய்வது எப்படி என்பதை அறிந்திருந்தார் கார்டியோலா.
ஆனால், இப்போது 34 வயது ஆகிவிட்டபோதும் மெஸ்ஸியே சிறந்த ஆட்டக்காரர் என உறுதியாக நம்பிய கார்டியோலா, மேன்சிட்டிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அவரைத் தடுத்து நிறுத்துவதற்காக திட்டம் வகுத்தார்.
ஆனாலும், கார்டியோலா அஞ்சியபடியே அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தேவிட்டது.
பாரிசின் 'பிரின்சஸ் பார்க்' அரங்கில் நேற்று அதிகாலை ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள பிஎஸ்ஜி-மேன்சிட்டி குழுக்கள் மோதின.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலேயே செனகல் நாட்டவரான இத்ரிஸா கெயி அடித்த அருமையான கோல் மூலம் முன்னிலை பெற்றது பிஎஸ்ஜி.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஆட்டத்தில் கோல் விழவில்லை. ஆனாலும், ஆட்டம் முடிய 16 நிமிடங்கள் இருந்தபோது அது நிகழ்ந்தது.
பந்துடன் மேன்சிட்டி வலையை நோக்கி முன்னேறிய மெஸ்ஸி, எம்பாப்பேவிடம் பந்தைத் தள்ளிவிட்டு, பின் மீண்டும் அவரிடமிருந்து அதைப் பெற்று, கோல்கட்டத்திற்கு ஓர் அடி வெளியே இருந்து, மிக நேர்த்தியாக கோலடித்தார். இதன்மூலம் பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றது.
இதுவே பிஎஸ்ஜி குழுவிற்காக மெஸ்ஸி அடித்த முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பார்சிலோனா குழுவிற்காக விளையாடியபின் இந்தப் பருவத்தில்தான் பிஎஸ்ஜி குழுவிற்கு மாறினார் மெஸ்ஸி.
இந்த கோல் மூலம் பெரும் நிம்மதி அடைந்த மெஸ்ஸி, "பிஎஸ்ஜி சார்பில் எனது முதல் கோலை அடித்தாக வேண்டும் என்ற வெறியில் இருந்தது உண்மைதான். சிறந்த எதிரணிக்கு எதிரான இந்த ஆட்டம் முழுநிறைவளிக்கும் வகையில் இருந்தது. முதல் ஆட்டத்தில் சமன் கண்டதால் இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமானது," என்றார் மெஸ்ஸி.
"நாங்கள் கோலடிப்பதைத் தவிர்த்து வேறு எல்லாவற்றையும் செய்தோம். எதிரணியினர் சிறப்பாகத் தற்காத்ததோடு, தாக்குதலில் அபாயகரமானவர்களாகத் திகழ்ந்தனர்," என்று கார்டியோலா சொன்னார்.
சாதனை சமன்
மேன்சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த கோல்மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் தொடர்ந்து 17 பருவங்களாக கோலடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மெஸ்ஸி. முன்னதாக, ரியால் மட்ரிட் வீரர் பென்சிமா இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து 16 பருவங்களில் கோல் போட்டுள்ளார். இந்த லீக்கில் இதுவரை மெஸ்ஸி 121 கோல்களையும் ரொனால்டோ 135 கோல்களையும் அடித்துள்ளனர்.

