ரொனால்டோ-மெஸ்ஸி மோதும் ஆட்டம்: US$2.6 மில்லியனுக்கு நுழைவுச்சீட்டு ஏலம்

ரொனால்டோ-மெஸ்ஸி மோதும் ஆட்டம்: US$2.6 மில்லியனுக்கு நுழைவுச்சீட்டு ஏலம்

1 mins read
c22965aa-36fd-4412-a1c8-2843ae0d618c
கடைசியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ரொனால்டோவின் (இடது) யுவென்டஸ் குழுவும் மெஸ்ஸியின் பார்சிலோனா குழுவும் மோதிய ஆட்டத்தில் யுவென்டஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அவ்விரு குழுக்களைவிட்டு வெளியேறியபின், இவ்விருவரும் நேருக்குநேர் பொருதுவது இதுவே முதன்முறை. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

ரியாத்: உலகின் முன்னணிக் காற்பந்து நட்சத்திரங்களான லயனல் மெஸ்ஸியும்ம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மோதும் நட்புமுறை ஆட்டம் இன்று வியாழக்கிழமை பின்னிரவு 1 மணிக்கு சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இடம்பெறுகிறது.

இந்த ஆட்டத்தைக் காண்பதற்கான சிறப்பு நுழைவுச்சீட்டை பத்து மில்லியன் ரியால் (US$2.6 மி., S$3.52 மி.) கொடுத்து வாங்கியுள்ளார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

'கற்பனைக்கும் அப்பால்' என்று பெயரிடப்பட்ட அந்த நுழைவுச்சீட்டை 'அக்கார்ஒன்' எனும் சொத்துச் சந்தை நிறுவனத்தின் பொது மேலாளர் முஷ்ரஃப் அல் கம்தி ஏலத்தில் வாங்கியதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் சவூதி அரேபியாவின் அல் நசர் குழுவுடன் இணைந்தார் போர்ச்சுகல் காற்பந்து சகாப்தம் ரொனால்டோ. கத்தாரில் சென்ற ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வாகை சூடி தமது வெகுநாள் கனவை நனவாக்கிய மனநிறைவோடு, மீண்டும் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவுடன் தமது காற்பந்துப் பயணத்தைத் தொடர்கிறார் அர்ஜென்டினா அணித்தலைவர் மெஸ்ஸி.

அல் நசர், அல் ஹிலால் குழுக்களின் வீரர்கள் அடங்கிய ஒன்றிணைந்த குழுவும் பிஎஸ்ஜி குழுவும் ஒன்றையெதிர்த்துக் களம்காணவுள்ளன.

அதிக விலைகொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிய அல் கம்தி, போட்டி முடிந்தபின் நடைபெறும் வெற்றிவிழாவில் கலந்துகொள்வார். அத்துடன், வீரர்கள் உடைமாற்றும் அறைக்குச் சென்று, மெஸ்ஸி, ரொனால்டோ என்ற இரு காற்பந்து சகாப்தங்களையும் அவர் நேரில் சந்தித்து அளவளாவுவார்.

சிறப்பு நுழைவுச்சீட்டு ஏலம் மூலம் கிடைத்த தொகை முழுவதும் அறப்பணிக்கு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்