இரண்டாவது தங்கம் வென்று முத்திரை பதித்த சாந்தி பெரேரா

இரண்டாவது தங்கம் வென்று முத்திரை பதித்த சாந்தி பெரேரா

1 mins read
03d60771-f2f0-45e2-8a17-09cd70863194
ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாந்தி பெரேரா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடந்துவரும் ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

முன்னதாக, 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கத்தை இவர் அறுவடை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வெல்ல வாய்ப்புள்ளோரில் ஒருவராக ஞாயிற்றுக்கிழமை நடந்த 200 மீட்டர் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த சாந்தி 22.70 நொடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து சாதித்தார்.

இந்தியாவின் ஜோதி யாராஜி 23.13 நொடிகளில் இரண்டாமிடத்தையும் சீனாவின் லி யுட்டிங் 23.25 நொடிகளில் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

இவ்வாண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 26 வயதான சாந்தி 100 மீ., 200 மீ., என இரண்டு போட்டிகளிலும் தங்கத்தைக் கைப்பற்றியிருந்தது நினைவுகூரத்தக்கது.

புதிய தேசிய சாதனையுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் சாந்தி வாகை சூடினார். இதன்மூலம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூருக்குப் பதக்கம் கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்
சாந்தி பெரேராவிளையாட்டுசிங்கப்பூர்தங்கம்