200 மீட்டர் தகுதிச் சுற்றில் சாந்தி முதலிடம்

200 மீட்டர் தகுதிச் சுற்றில் சாந்தி முதலிடம்

2 mins read
b1b2e3be-4727-42fe-bb46-3f95b3317714
ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டத்திற்கான தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த சிங்கப்பூரின் சாந்தி பெரேரா (வலது) - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற 12 மணி நேரத்தில் திடலுக்குத் திரும்பி, 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார் சிங்கப்பூர்த் திடல்தட வீராங்கனை சாந்தி பெரேரா.

மூன்றாவது தகுதிச் சுற்றில் பங்கேற்ற 27 வயதான சாந்தி, 23.12 நொடிகளில் 200 மீ. தொலைவைக் கடந்தார். மூன்று தகுதிச் சுற்றுகளிலும் சேர்த்து ஆகக் குறைவான நேரம் எடுத்துக்கொண்டவரும் இவரே.

பஹ்ரேனின் எடிடியோங் ஒஃபோனிம் ஒடியோங் 23.35 நொடிகளுடன் இரண்டாமிடம் பிடித்தார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ., 200 மீ., 4x100 மீ. போட்டிகளில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் 200 மீ. ஓட்டத்திற்கான அரையிறுதிச் சுற்று ரத்து செய்யப்பட்டுவிட்டது.

மொத்தம் எண்மர் போட்டியிடும் இறுதிச்சுற்று திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முன்னதாக, சனிக்கிழமை நடந்த 100 மீ. ஓட்ட இறுதிச் சுற்றில் சாந்தி வெள்ளிப் பதக்கத்தைத் தனதாக்கினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், திடல்தட விளையாட்டில் சிங்கப்பூருக்கு 49 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த முதல் பதக்கம் இதுதான்.

இவ்வாண்டு மே மாதம் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சாந்தி 100 மீ., 200 மீ., என இரண்டிலும் தங்கம் வென்றார். அதற்கு இரு மாதங்கள் கழித்து நடந்த ஆசியத் திடல்தடப் போட்டிகளிலும் அவரே அவ்விரு பந்தயங்களிலும் வாகை சூடினார்.

அதன்பின் ஆகஸ்ட் மாதம் நடந்த உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 200 மீ. பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சாந்தி. 22.57 நொடிகளில் அத்தொலைவைக் கடந்ததால் அடுத்த ஆண்டு பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதிபெற்றார்.

குறிப்புச் சொற்கள்