2024 டி20 உலகக் கிண்ணம்: நேப்பாளம், ஓமான் தகுதி

2024 டி20 உலகக் கிண்ணம்: நேப்பாளம், ஓமான் தகுதி

1 mins read
c665fe80-f7f3-4e60-bfd4-f1173916abe7
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம். - படம்: ஐசிசி
Google News Preferred Icon

காத்மாண்டு: அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட நேப்பாளமும் ஓமானும் தகுதிபெற்றுள்ளன.

நேப்பாளத்தில் நடந்துவரும் டி20 உலகக் கிண்ணத்திற்கான ஆசியத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அவ்விரு அணிகளும் தத்தம் அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்றன.

வெள்ளிக்கிமை நடந்த அரையிறுதி ஆட்டங்களில், நேப்பாளம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளையும் (யுஏஇ), ஓமான் பத்து விக்கெட் வித்தியாசத்தில் பஹ்ரேனையும் தோற்கடித்தன.

கடைசியாக இலங்கையில் 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நேப்பாளம் விளையாடியிருந்தது. ஓமான், டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடவிருப்பது இது மூன்றாவது முறை. முன்னதாக, 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் அது பங்கேற்றது.

2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள், ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் என்ற வகையில், நான்கு பிரிவுகளாகப் போட்டியிடவுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் எட்டு’ சுற்றுக்கு முன்னேறும். அதிலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

குறிப்புச் சொற்கள்