தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்

2 mins read
e4b12783-8b50-48b8-a4b0-caec3b9d2a51
வலியால் துடிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், சிட்னி மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 25) நடந்த அப்போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பின்புறமாக ஓடிச்சென்று அருமையாகப் பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார் இந்திய அணியின் துணைத் தலைவரான ஷ்ரேயாஸ். அப்போது, கீழே விழுந்ததில் அவருக்கு இடது விலாப் பகுதியில் காயமேற்பட்டது.

உடனடியாக ஓய்வறை திரும்பிய அவர், பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீழே விழுந்ததால் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அந்நேரத்தில் அது அவரது உயிருக்கே அச்சுறுத்தலான காயமாகக் கூறப்பட்டது.

அவரது ரத்த அழுத்தமும் அபாய அளவிற்குக் கீழிறங்கியதால் அவருக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஆயினும், அவர் இன்னும் இரு நாள்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கலாம் என்றும் அதற்குள் ரத்தக்கசிவு கட்டுப்படாவிடில் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் மேலும் சிறிது காலம் இருக்க நேரிடலாம் என்றும் அறியப்படுகிறது.

அவரது உடல்நிலை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்தது ஏழு நாள்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே இருப்பது பாதுகாப்பானது என்றும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், “ஷ்ரேயாசுக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. அவர் சீரான உடல்நிலையில் இருக்கிறார்; நன்கு தேறி வருகிறார்,” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என வென்ற நிலையில், அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் புதன்கிழமை தொடங்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்