ஃபாரஸ்ட் அதிர்ச்சித் தோல்வி; விரெக்ஸ்ஹம் கொண்டாட்டம்

ஃபாரஸ்ட் அதிர்ச்சித் தோல்வி; விரெக்ஸ்ஹம் கொண்டாட்டம்

2 mins read
e74eec00-1ff7-4425-b891-2fff956d3bd9
நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டின் பெனால்டி முயற்சிகளை முறியடித்து விரெக்ஸ்ஹமை வெற்றி பெறச் செய்த கோல்காப்பாளர் ஆர்த்தர் ஒகோன்குவோவுடன் கொண்டாடிய சக ஆட்டக்காரர்கள். - படம்: ஏஎஃப்பி

விரெக்ஸ்ஹம்: இங்கிலாந்தின் இரண்டாம் நிலை காற்பந்து லீக்கில் விளையாடும் விரெக்ஸ்ஹம், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேற்றி உள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடைபெற்ற ஆட்டத்தில் விரெக்ஸ்ஹமுக்கும் ஃபாரஸ்ட்டுக்கும் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டம் விரெக்ஸ்ஹமின் விளையாட்டரங்கில் நடந்தது.

இருகுழுக்களும் தரப்புக்கு மூன்று கோல் போட்டதில் ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் விரெக்ஸ்ஹம் முன்னிலை வகித்தது.

ஆனால், ஆட்டத்தின் 76வது நிமிடத்திலும் 89வது நிமிடத்திலும் ஃபாரஸ்ட் கோல் போட்டது.

ஆட்டம் சமநிலையில் முடிய வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது.

இதில் 4-3 எனும் கோல் கணக்கில் விரெக்ஸ்ஹம் வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு விரெக்ஸ்ஹம் தகுதி பெற்றுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளில் விரெக்ஸ்ஹம் குழு, இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் குழு ஒன்றைத் தோற்கடித்திருப்பது இதுவே முதல்முறை.

ஃபாரஸ்ட்டின் இரண்டு பெனால்டி முயற்சிகளை விரெக்ஸ்ஹமின் கோல் காப்பாளர் ஆர்த்தர் ஒகோன்குவோ முறியடித்து, தமது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

விட்டுக்கொடுக்காமல் போராடி வென்ற தமது ஆட்டக்காரர்களை விரெக்ஸ்ஹம் குழுவின் நிர்வாகி ஃபில் பார்க்கின்சன் பாராட்டினார்.

மறுமுனையில், ஃபாரஸ்ட் ஆட்டக்காரர்கள் ஆட்டத்தின் முற்பாதியில் மிகவும் மோசமாக விளையாடியதால் தோல்வியின் பிடியில் சிக்கியதாக அக்குழுவின் நிர்வாகி ஷான் டைச் அதிருப்தி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்