முக்கிய நிகழ்ச்சிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தைக் கைவிட்டது ஃபிஃபா

முக்கிய நிகழ்ச்சிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தைக் கைவிட்டது ஃபிஃபா

2 mins read
உலகக் கிண்ணப் போட்டி போன்றவை தொடர்பான திட்டம்
706f1563-4bc6-4ae8-9c3f-c70e6bf61346
ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

உலகக் கிண்ணப் போட்டி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் தனியார் முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தை ஃபிஃபா எனும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் கைவிட்டுள்ளது.

அந்தத் தகவலை சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ வெள்ளிக்கிழமை (ஜூலை 31) வெளியிட்டார். “அனைத்துத் தரப்புகளின் கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்த பிறகு, இந்த முதலீட்டு அனுமதித் திட்டம் எத்தகைய ஆதரவைப் பெற்றிருந்தாலும் முதலில் நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்திற்கு இனி எந்த வகையிலும் பலனளிக்காத வகையிலான பிளவுகளை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது,” என்று இன்ஃபன்டினோ கூறினார்.

பிரிட்டனின் ஸ்கை நியூஸ் ஊடகத்திடம் அந்தக் கருத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

இன்ஃபன்டினோவின் மூத்த ஆலோசகர் ஒருவர் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதவி விலகினார். பின்னர் வெள்ளிக்கிழமை ஃபிஃபாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.

அத்துடன், இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு புதிய பிரிவில் சுமார் 20 விழுக்காட்டுப் பங்கை விற்பதன் மூலம் 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது.

இருப்பினும், உலகெங்கிலும் உள்ள காற்பந்து அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, இன்ஃபாடினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கோர்டிரோ, இந்தத் திட்டத்தைக் “காற்பந்துக்கு எதிரான மோசமான ஓர் ஒப்பந்தம்,” என்று விமர்சித்து உடனடியாகப் பதவி விலகினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பலரும் கருத்துகளைக் கூறியுள்ளனர்.

ஆசியக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஷேக் சல்மான் இப்ராஹிம் அல்-கலிஃபா, எந்தவொரு முடிவாக இருந்தாலும் கலந்தாலோசிப்பது முக்கியம் என்று கூறினார்.

“உலகளாவிய காற்பந்தின் எதிர்காலம் எப்போதும் முறையான கலந்தாலோசனை, கூட்டு உரையாடல், விளையாட்டின் நிறுவப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் வடிவமைக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.

காற்பந்தாட்டம் பலரின் யோசனைகளைக் கேட்டு வளர்ச்சியடைந்ததை ஆஸ்திரேலியக் காற்பந்துச் சங்கத் தலைவர் அன்டர் ஐசக் நினைவுகூர்ந்தார்.

அந்த முன்னேற்றம் தொடர வேண்டும் என்று சொன்ன அவர், சிலவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

“சில கொள்கைகள் ஒருபோதும் மாறக்கூடாது. நேர்மை. சுதந்திரம். நல்ல நிர்வாகம். வெளிப்படைத்தன்மை. அர்த்தமுள்ள கலந்தாலோசனை.

“தகுந்த செயல்முறை. இவை முன்னேற்றத்திற்கான தடைகள் அல்ல. இவையே நிலையான முன்னேற்றத்தைச் சாத்தியமாக்குகின்றன,” என்றார் ஐசக்.

ஃபிஃபாவின் முடிவை ஸ்வீடிஷ் காற்பந்துச் சங்கத் தலைவர் சைமன் ஆஸ்ட்ரோமும் வரவேற்றார்.

“காற்பந்து எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த தொடர் உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகம்உலகக் கிண்ணம்விற்பனை