மூன்றாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மாற்றம்

1 mins read
b229039a-1dc0-417f-ab5e-cdc5dd27eb74
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட். - படம்: ஏஎஃப்பி

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிராக வியாழக்கிழமை (பிப்ரவரி 15) தொடங்கவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்குப் பதிலாக உட் இடம்பெற்றுள்ளார்.

முதல் போட்டியில் விளையாடிய உட், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 25 ஓவர்களை வீசியபோதும் அவரால் விக்கெட் வீழ்த்த இயலவில்லை.

இதனிடையே, இந்திய அணியில் பந்தடிப்பாளர் சர்ஃபராஸ் கான், விக்கெட் காப்பாளர் துருவ் ஜுரெல் இருவரும் அறிமுக வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுவிட்டார். கே எல் ராகுலும் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

அதுபோல், முதலிரு போட்டிகளில் விக்கெட் காப்பாளராகச் செயலாற்றிய கே எஸ் பரத் ஓட்டம் குவிக்கத் தவறியதால் இம்முறை அப்பொறுப்பு ஜுரெலிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 எனச் சமநிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்