ஓரங்கட்டப்பட்ட சிவப்பு அட்டை முடிவு; உலகக் கிண்ணத்தில் சலசலப்பு

ஓரங்கட்டப்பட்ட சிவப்பு அட்டை முடிவு; உலகக் கிண்ணத்தில் சலசலப்பு

2 mins read
8f324e51-4905-4575-82a5-0182ac813a90
அமெரிக்க ஆட்டக்காரர் ஃபொலரின் பெலகன். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க நட்சத்திர ஆட்டக்காரர் ஃபொலரின் பெலகன்னுக்கு விதிக்கப்பட்ட சிவப்பு அட்டைக்கான தற்காலிகத் தடையை அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) ஒத்திவைத்துள்ளது.

போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற பெலகன், பெல்ஜியத்துக்கு எதிரான அடுத்த சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். இந்தக் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை மூன்று கோல்கள் போட்டு அமெரிக்க அணியின் முன்னணி ஆட்டக்காரராக பெலகன் விளங்குகிறார். உலகக் கிண்ண விதிகளின்படி சிவப்பு அட்டை பெறும் ஆட்டக்காரர் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்ற பொதுவான விதியை மீறி, ஃபிஃபா தனது ஒழுங்குமுறைச் சட்டத்தின் 27வது பிரிவைப் பயன்படுத்தி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பொதுவாக கடுமையான தப்பாட்டம் காரணமாகச் சிவப்பு அட்டை காட்டப்பட்ட வீரர் ஓர் ஆட்டத்தில் களமிறங்க முடியாது. அதுமட்டுமல்லாமல், சிவப்பு அட்டை காட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது என்பது உலகக் கிண்ணப் போட்டியின் விதிமுறைகளில் ஒன்று.

எனவே, ஃபிஃபாவின் இந்த அசாதாரண முடிவின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இத்தடை குறித்துப் பேசியதை அடுத்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஃபிஃபாவின் இந்த நடவடிக்கைக்கு பெல்ஜியக் காற்பந்துச் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த முடிவு ஒட்டுமொத்த போட்டியையும் கேலிக்கூத்தாக்கியுள்ளதாகக் காற்பந்து விமர்சகர்கள் சாடியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துஅமெரிக்கா

தொடர்புடைய செய்திகள்